காதல் உண்மையானதென புதிய காதலியிடம் நிரூபிக்க, முன்னாள் காதலியை கொன்ற இளைஞன்!

புதிய காதலியிடம் தனது காதலை நிரூபிக்க, முன்னாள் காதலியை கொலை செய்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவில் தென் மத்திய நோவோசிபிர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுசுன் கிராமத்திற்கு அருகே இந்த கொலை நிகழ்ந்துள்ளது.

அலெக்ஸி பெட்ரோவ் (20) என்ற இளைஞனே இந்த கொலையை செய்துள்ளார். முன்னாள் காதலி அனஸ்தேசியா போஸ்பெலோவாவைவிருந்தொன்றுக்காக அழைப்பதாக கூறி, காட்டுக்கு அழைத்து சென்று கொலையை செய்துள்ளார்.

இந்த ஜோடி சில காலமாக காதலித்து வந்த நிலையில், அலெக்ஸி பெட்ரோவ் புதிய பெண்ணொருவருடன் அறிமுகமாகியுள்ளார். யெகாடெரினா கார்போவா (20) என்ற அந்த பெண்ணுடன் பழக்கிப் பார்த்து, பிடித்துப் போகவே, அனஸ்தேசியாவை கழற்றி விட்டு, அவருடன் காதல் வசப்பட்டுள்ளார்.

அனஸ்தேசியா போஸ்பெலோவா

இந்த நிலையில், கடந்த 14ஆம் திகதி அனஸ்தேசியாவிற்கு அழைப்பேற்படுத்தி, தானும், புதிய காதலியும் அவருக்கு விருந்து வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர், அவரை அழைத்துக் கொண்டு புதிய காதல் ஜோடி, காட்டுப்பகுதிக்கு சென்றது.

அங்கு நெருப்பு பற்ற வைத்து இறைச்சிகளை வாட்டி உண்டதுடன், மது அருந்தியுள்ளனர். இதன்போது, திடீரென தன்னிடமிருந்த கத்தியால் முன்னாள் காதலியின் நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார்.

கடும் போராட்டத்தின் பின், அங்கிருந்து காயங்களுடன் தப்பியோடிய அனஸ்தேசியா, தனது நண்பர் ஒருவருக்கு அழைப்பேற்படுத்தி, உதவி கோரியுள்ளார். இதற்குள் மீண்டும் அவரை கண்டுபிடித்த அலெக்ஸி பெட்ரோவ்-யெகாடெரினா கார்போவா ஜோடி, அவரது கழுத்தில் ஆழமாக கத்தியை செருகி, கழுத்தை நெரித்து கொன்றது.

பின்னர், பற்றைக்குள் உடலை மறைத்து விட்டு, வீடுகளிற்கு திரும்பினர். தம்முடன் வந்த அனஸ்தேசியா காணாமல் போய்விட்டதாக உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

தேடுதல் நடத்திய பொலிசார் சடலத்தை மீட்டதுடன், அந்த ஜோடியை கைது செய்தனர்.

முன்னதாக, அனஸ்தேசியாவை தேடி நடத்தப்பட்ட தேடுதல்களிலும் அவர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

அலெக்ஸி பெட்ரோவ்

யெகாடெரினா கார்போவாவிற்கு 2 வயதில் ஏற்கனவே குழந்தையொன்று உள்ளது. காதலன் அலெக்ஸி பெட்ரோவ்வின் பழைய காதலை பற்றி அடிக்கடி சந்தேகப்பட்டு பேசியதுடன், தன் மீதான காதல் உண்மையாயின் முன்னாள் காதலியை கொல்ல வேண்டுமென அவர் நிபந்தனை விதித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த ஜோடி 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனையை அனுபவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here