முருகன்- நளினி சந்தித்துப் பேச அனுமதி மறுப்பது ஏன்? – ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனைச் சந்தித்துப் பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால், கடந்த மூன்று மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் சிறையில் ஜூன் 1-ம் தேதி முதல் முருகன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், நளினியும் முருகனும் சந்தித்துப் பேச அனுமதி வழங்கக் கோரியும் நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன் 22) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

7 பேரை விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, சிறைவிதிகளின் படி, இருவரையும் சந்தித்துப் பேசக் கூட அனுமதி மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here