ஆறுமுகன், திகாம்பரம் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்துகிறார் நவீன்: இராதாகிருஷ்ணன் பாய்ச்சல்!

ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்திய நவீன் திஸாநாயக்கவே, அமரர் ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான முன்னாள் அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொட்டகலையில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கிடைப்பதற்கு தொண்டமான் முட்டுக்கட்டையாக இருந்தார் என நவீன் திஸாநாயக்க தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். ஆறுமுகன் தொண்டமான் இன்று உயிருடன் இல்லை. அவர் பதிலளிக்கமாட்டார் என தெரிந்துதான் அவர் தலையில் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அதேபோல் தீபாவளி முற்பண கொடுப்பனவுக்கு திகாம்பரம் முட்டுக்கட்டையாக இருந்தார் எனவும் குறிப்பிடுகிறார். கொடுப்பனவை வழங்குமாறு அவர்தான் பேச்சுவார்த்தை நடத்தினார். எனவே, எப்படி முட்டுக்கட்டையாக இருக்கமுடியும்? எனவே நவீன் திஸாநாயக்க பொய்யுரைக்கும் அரசியலை முன்னெடுத்து வருகிறார்.

ஐக்கிய தேசியக்கட்சியை இரண்டாக பிளவுபடுத்திய நவீன் திஸாநாயக்கவே, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் கூட்டு ஒப்பந்தத்துக்கும் வருவார். எனவே, எப்படி சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பார்?

யானை சின்னத்தை மறந்து விடுங்கள். இம்முறை தொலைபேசி சின்னத்தை மனதில் வைத்து வாக்களிக்கவும். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலேயே நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி என்பதையும் மறந்துவிடாதீர்கள். நுவரெலியா மாவட்டத்தில் நாம் மூவரும் வெற்றிபெற்றால் திலகராஜ் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் வருவார்.” – என்றார்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here