கூட்டமைப்பு கிடைத்த வாய்ப்புக்களை கோட்டை விட்டுவிட்டு மீண்டும் பேரம் பேச வாய்ப்பு கேட்கிறார்கள்: சந்திரகுமார் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களால் பல தடவைகள் பல தேர்தல்களில் வழங்கப்பட்ட பலமான பேரம் பேசுகின்ற வாய்ப்புக்களை எல்லாம் வீணடித்துவிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தமிழ் மக்களிடம் பேரம் பேசும் சக்தியை தமக்கு வழங்குமாறு கோருவது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என சுயேச்சைக் குழு ஐந்தில் தேர்தல் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று (21) கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீள்குடியேற்ற ஆரம்ப காலத்தில் மக்கள் எதுவுமற்றவர்களாக எதுவும் இல்லாத பிரதேசங்களில் மீள்குடியேறிய போது நாம் அந்த மக்களிடம் அரசியல் செய்யவில்லை நான் அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் அரசியல் செய்திருந்தால் அடுத்த 2015 தேர்தலிலும் வெற்றிப்பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பேன். ஆனால் நான் அக் காலத்தில் மக்களின் அவலத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. மாறாக கையில் பைகளுடன் மீள்குடியேறிய மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டோம், அழிந்து கிடந்த பிரதேசத்தை மீள கட்டியெழுப்ப கடுமையாக உழைத்தோம். கல்வி, பொருளாதாரம் என பல துறைகளில் இந்த எமது பிரதேசங்களை கட்டியெழுப்பினோம். அதன் விளைவே 2011 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதிக்குள் கிளிநொச்சி மாவட்டம் துரித அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாறியது.

அதன் பின் இந்த மாவட்டத்தில் எதுவுமே நடக்கவில்லை. மக்கள் வெறுமைக்குள் இருந்தார்கள். தங்களது பிரச்சினைகள் தேவைகளை தீர்த்துக்கொள்ள முடியாது துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார்கள். அரசின் பங்காளிகளாக ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்திற்கும், நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கும் அரசுக்கு சார்பாக கைகளை உயர்த்தியவர்கள் மக்களின் வாழ்க்கையை உயரத்துவதற்கு மறந்துவிட்டார்கள். மாறாக தங்களின் சொந்த வாழ்க்கையினை பலமாக்கிக்கொண்டார்கள். கடந்த நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் சக்தியை வழங்கியிருந்தார்கள் ஆனால் அந்த பேரம் சக்தியால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது? எனக் கேள்வி ஏழுப்பிய அவர், தமிழ் மக்கள் கடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கி சிந்தித்து தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here