சம்பள பிரச்சனையை வைத்து அரசியல் செய்கிறார்கள்!

மலையக அரசியலில் சகலரும் சம்பள பிரச்சினையை கோஷமாக முன்வைக்கின்றனர். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இறுதியாக இ.தொ.கா நடத்திய பேச்சுவார்த்தை மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அதன் புதிய செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இனி வரும் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினையை வைத்து எவரும் அரசியல் செய்ய முடியாத அளவிற்கு வெகுவிரைவில் அவ்விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

மலையகத்தில் தோட்ட தோட்டத் தொழிலாளர்களது சம்பள பிரச்சினையை வைத்துப் பலர் அரசியல் நடத்துகின்றனர். தேர்தல்கால பேசு பொருளாகவும் இது மாறிவிட்டது. நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் பல உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றன.

பத்திரிகை அறிக்கைகள், தொலைக்காட்சிகளில் வீரவசனங்கள் பேசுபவர்கள் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோதிலும் இதுவரை செய்தது எதுவும் இல்லை. வெறுமனே செய்வோம், செய்து தருவோம், செய்து காட்டுவோம் என்ற அறிக்கைகளை மட்டுமே விட்டு தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இனியும் இதற்கு அனுமதிக்க முடியாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

எனவே இனிவரும் காலத்தில் இவ்விடயத்தை யாருமே பேசாத வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள பிரச்சினைக்கு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்மானத்திற்கு வர ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இறுதியாக நடத்திய பேச்சுவார்த்தைகளில் அவர் கம்பனிகளுக்கு மிகவும் இறுக்கமான அறிவுறுத்தலை விடுத்து நாங்கள் எதிர்பார்க்கின்ற சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்தவாறு மிக விரைவாக தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here