பழிவாங்கினார்களாம்: கனடா, நோர்வே, அயர்லாந்திற்கு ஐ.நாவில் வாக்களிக்காமல் விட்ட இலங்கை!

ஐ.நா பாதுகாப்புசபையின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளை தெரிவு செய்வதற்காக கடந்த வாரம் நடந்த தேர்தலில் மேற்கு நாடுகள் எதனையும் இலங்கை ஆதரிக்கவில்லை.

இலங்கை தொடர்பான அவர்களின் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்ற செய்தியை இலங்கை இராஜதந்திரிகள் அந்த நாடுகளிற்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புசபையின் நிரந்தரமல்லாத அங்கத்தவருக்காக கனடா, அயர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் போட்டியிட்ட நிலையில், அவற்றில் எந்த நாட்டையும் இலங்கை ஆதரிக்கவில்லை.

இலங்கையின் செய்தி, அந்த 3 நாடுகளிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான தேவை உள்ளது. மேலும் சர்வதேச அரங்கில் மூன்று நாடுகளும் எங்களுடன் எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பதற்கான தீவிர மறு மதிப்பீடு.” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களை அயர்லாந்து ஆதரித்து வந்தது. கனடா, மற்றும் நோர்வேயில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்வதுடன், அரசுகளில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற 74 வது ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் ஆசிய பசிபிக் பிரிவில் இந்தியாவையும், ஆபிரிக்கா குழுவில் கென்யாவையும் இலங்கை ஆதரித்தது. லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் குழுவில் மெக்ஸிகோ மட்டுமே போட்டியிட்டு, வென்றது.

இம்முறை போட்டியிட்ட நாடுகளில் இந்தியா, மெக்ஸிகோ, அயர்லாந்து, நோர்வே மற்றும் கென்யா ஆகியவை வெற்றிபெற்றுள்ளன.

இலங்கையில் ஆதரவு அளிக்காத கனடா மாத்திரமே தோல்வியடைந்திருந்தது. எனினும், இந்த தோல்வியில் இலங்கையின் வாக்கு செல்வாக்கு செலுத்துவதாக அமையவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here