படுக்கையிலிருந்து வாதாடிய சட்டத்தரணி!

உச்ச நீதிமன்றத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், தன் வீட்டு படுக்கை அறையில் சாய்ந்தபடி வாதாடிய வழக்கறிஞருக்கு, நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோல், ஒரு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் முன்னிலையில் நடந்தது. அப்போது வாதாடிய வழக்கறிஞர் ‘டி சர்ட்’ அணிந்து, படுக்கையில் சாய்ந்தபடி, வாதங்களை எடுத்து வைத்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கூறியதாவது: ஒரு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் ஆஜராகும் போது பின்பற்றும் ஒழுங்குமுறைகளை, வீட்டில் இருந்து வாதாடினாலும் கடைப்பிடிக்க வேண்டும். பொருத்தமற்ற படங்களை பின்னணியில் காண்பிப்பது உள்ளிட்ட, நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். கொரோனா தீவிரமாக பரவும் சூழலில், வழக்கு விசாரணைகளில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அதில் பங்கேற்கும் வழக்கறிஞர்கள் கண்ணியமான முறையில் உடை அணிவதுடன், நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் மரபுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றார்.

இதேபோன்ற ஓர் பிரச்னையில், வீடியோ கான்பரன்சிங் விசாரணையில் வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, உச்ச நீதிமன்றம் 15ம் தேதி கருத்து தெரிவித்து இருப்பதையும்  அவர் சுட்டிக் காட்டினார்.இதையடுத்து, தவறை உணர்ந்த வழக்கறிஞர் தன் செயலுக்காக நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here