மணற்காட்டில் மீண்டும் பாரிய மணற்கொள்ளைக்கு அத்திவாரம்: மாம்பழம் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை!

மணற்காட்டில் மீண்டும் பாரிய மணற்கொள்ளைக்கு அத்திவாரம் இடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மணல் அகழ்வை மணற்கொள்ளையாக மாற்றி, ஏகபோக உரிமை கொண்டாடி ருசி கண்ட அரசியற் புள்ளிகளே புதிய ஆட்சியில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக மீண்டும் கைவரிசையைக்காட்ட ஆரம்பித்துள்ளனர். மணல் விநியோகம் மீண்டும் அரசியல்வாதிகளினதோ, அரசியல் பின்புலம் கொண்டவர்களின் கைகளுக்கோ போவது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தவறின் மணல் அகழ்வு பாரிய மணற்கொள்ளையாக விஸ்வரூபம் பெற்று யாழ் குடாநாடு மிகமோசமான சூழற்சீர்குலைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றவருமாகிய பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

மணற்காட்டு மணல் விநியோக முறையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதையொட்டி பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

மணல் அகழ்விற்கான அனுமதியை மத்திய அரசாங்கமே வழங்குகிறது. எனினும், ஏற்கனவே மணற்கொள்ளையினால் ஏற்பட்டிருந்த சூழற்பாதிப்புகளைக் கருத்திற் கொண்டும் நியாயமான விலையில் மக்களுக்கு மணல் கிடைக்கும் பொருட்டும் வடக்கு மாகாண சபையில் அமைச்சராக நான் பதவியேற்றதும் சில ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. வடமராட்சி கிழக்கின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்க அதிபர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர், அப்பிரதேச மக்கள் ஆகிய முத்தரப்பினருடனான பலசுற்றுப் பேச்சுவார்த்தையின் பின்னர் மணல் அகழ்வு அப்பிரதேச கிராமமட்டப் பொது அமைப்புகளிடமும், மணல் விநியோகம் யாழ் – மாவட்ட பாரவூர்திகள் கூட்டுறவுச் சங்கத்திடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் மணல் வியாபாரத்தின் வருவாயில் பெரும்பகுதி அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட்டது. அதேபோன்றே, கிராமமட்ட அமைப்புகள் பெற்ற வருவாயின் கணிசமான பகுதி பிரதேச செயலரின் நெறிப்படுத்துகையில் அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், புதிய ஆட்சியில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியுள்ளது.

மணற்காட்டு கிராம அபிவிருத்திச்சங்கத்திடம் இருந்து மணலைப் பெற்று நேரடியாக விநியோகித்து வந்த யாழ்-மாவட்ட பாரவூர்திகள் கூட்டுறவுச் சங்கத்தினர் புறந்தள்ளப்பட்டு இடையே அரசியல் பின்புலத்துடன் கூடிய இடைத்தரகுப் பாரவூர்திப் போக்குவரத்துப் புகுந்துகொண்டுள்ளது.

இவர்களிடமிருந்தே யாழ்-மாவட்ட பாரவூர்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் மணலைப் பெற்று விநியோகிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் பாரிய அளவில் மணல் அகழ்வு இடம்பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த காலத்தில் மணற்கொள்ளை தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியே பகிர்ந்து கொண்டமைக்காக குடத்தனையைச் சேர்ந்த தேவராசா கேதீஸ்வரன் என்ற சூழற்பற்றாளர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இது ஏற்படுத்திய அச்சம் காரணமாக இப்போதும் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டுள்ளவர்களின் பின்னணி குறித்து வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்க அப்பகுதிமக்கள் அஞ்சும் சூழ்நிலையே நிலவுகிறது.

மணல் அகழ்வு, மணல் விநியோகம் அரசியல்வாதிகளின் கைகளுக்குப் போய்ச்சேர்வது தொடர்பாகத் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் மக்களுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் எப்போதும் பக்கபலமாக நிற்கும். இவர்களின் போராட்டத்திற்குத் துணை நிற்கும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் எதுவாயினும் அவர்களுடன் சேர்ந்து போராடவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தயாராகவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here