புதுச்சேரியில் மின்வெட்டைச் சரி செய்யாததைக் கண்டித்து சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ தர்ணா

முத்தியால்பேட்டையில் மின்வெட்டைச் சரி செய்யாததைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் சட்டப்பேரவையில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மின்துறையை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 18 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் மாலை 5.45 மணி வரை மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். அதற்கு மேல் பணிபுரிவதில்லை.

இந்நிலையில், நேற்று (ஜூன் 19) இரவு முத்தியால்பேட்டை தொகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மின்துறை ஊழியர்களை பொதுமக்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்பு கொண்டும் யாரும் போனை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மின் தடையால் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதனைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் இன்று (20) சட்டப்பேரவை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது, அவர் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளியைத் தொடர்புகொண்டு பேசும்போது, “மின்துறையைத் தனியார்மயமாக்கும் முடிவைக் கண்டித்து ஊழியர்கள் நடத்தும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.

அதே நேரத்தில் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடிய உங்களுடைய செயல்பாடு கண்டிக்கத்தக்கது. இதனை அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என்றார்.

அதற்கு மின்துறை கண்காணிப்பாளர், இப்பிரச்சினை தொடர்பாக மின்துறை கூட்டு போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரனிடம் பேசிவிட்டுப் பதில் அளிப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து சிறிது நேரத்தில் எம்எல்ஏவைத் தொடர்பு கொண்ட அவர், “இன்று முதல் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்கிறார்கள். எனவே, நீங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ போராட்டத்தைக் கைவிட்டார்.

மேலும், “உங்களது கோரிக்கையை ஏற்று தற்காலிமாக போராட்டத்தைக் கைவிடுகிறேன். தொடர்ந்து, இதுபோல் புதுச்சேரியில் எங்கேனும் மின்தடை ஏற்பட்டு அதனைச் சரி செய்யாமல் இருந்தால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறிய அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அதிமுக எம்எல்ஏவின் திடீர் தர்ணா போராட்டத்தால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here