சுமந்திரனுக்காக பிரச்சாரம் செய்வதால் தமிழ் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால், அந்த வரலாற்று தோல்வியை ஏற்க தயார்: சிறிதரன் அதிரடி!

சுமந்திரனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால், அந்த வரலாற்று தோல்வியை ஏற்றுக்கொள்ள தயார்.

இவ்வாறு அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி, சி.சிறிதரன்.

தென்மராட்சியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்களிற்கும், தொகுதி கிளை உறுப்பினர்களிற்குமிடையிலான சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சசிகலா ரவிராஜ், இ.ஆனொல்ட், வே.தபேந்திரன் ஆகியோரை தொகுதி கிளை உறுப்பினர்களிற்கு அறிமுகப்படுத்தும் கூட்டமாக நேற்று முன்தினம் இது அமைந்திருந்தது.

தொகுதி கிளை தலைவர் கே.சயந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் இலங்கை தமிழ் அரசு கட்சியே யாழில் 7 ஆசனங்களையும் கைப்பற்றலாம் என்றார்.

சசிகலா ரவிராஜ் குறித்தும் சில காரசாரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு, சசிகலா பின்னர் விளக்கமளித்திருந்தார்.

எம்.ஏ.சுமந்திரன் மூலமாக அரசியலில் முக்கிய பொறுப்பு நிலைகளிற்கு வந்த இ.ஆனொல்ட்டும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். எனினும், அண்மைக்காலமாக அவரது நடவடிக்கை கட்சிக்குள் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. அவர் சுமந்திரனை தவிர்த்து, தனித்தவில் வாசிக்க ஆரம்பித்திருந்தார். சுமந்திரனுடன் திட்டமிட்ட கூட்டங்களை தவிர்த்து வந்தார். இது சுமந்திரன் தரப்பில் கடுமையான அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.

இந்த நிலையில், ஆனோல்ட்டும் இருக்குமிடத்தில் சிறிதரன் உரையாற்றினார்.

“சிலர் சொல்கிறார்கள்- ஏன் சுமந்திரனுடன் செல்கிறீர்கள்? அவருடன் சென்றால் உங்களிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என. சுமந்திரனுடன் இணைந்த பிரச்சாரம் செய்வதால் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால், அந்த வரலாற்று தோல்வியை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறேன்“ என சிறிதரன் தெரிவித்தார்.

அண்மைய வாரங்களாக தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதியினர்-சுமந்திரனிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் கூட- சுமந்திரனுடன் பிரச்சாரத்திற்கு சென்றால் தோல்வியடைவோம் என கட்சிக்குள் அப்பிராயமொன்றை உருவாக்கி வருகிறார்கள். விடுதலைப் புலிகள் விவகாரத்தில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக குறிப்பிடப்படும் கருத்தின் பின்னர் ஒரு பகுதியினரும், ஏற்கனவே சிலபல விவகாரங்களில் அதிருப்தியிலிருந்தவர்களும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.

அண்மையில் நெடுந்தீவில் சுமந்திரன் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பிலும் அனொல்ட் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சிறிதரன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த சந்திப்பு குறித்து சசிகலா ரவிராஜ் என்ற முகப்புத்தத்தில் கே.சயந்தனை குற்றம்சுமத்தி பதிவொன்று வெளியாகியிருந்தது. எனினும், இந்த முகநூலை சசிகலா இயக்குவதில்லையென்றும், அவரது ஆதரவாளர் அணியிலுள்ள இளைஞரே இயக்குவதாகவும் தெரிய வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here