ஐ.தே.க, சஜித் தரப்பிற்கு வாக்களிப்பது வீண்!

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும். நுவரெலியா மாவட்டத்தையும் எமது அணியே கைப்பற்றும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார்.

அட்டன், புளியாவத்தை நியூட்டன் தோட்டத்தில் 19.06.2020 அன்று மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வீட்டுப்பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தளவான வீடுகளே கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு நடக்குமானால் வீட்டுத்திட்டத்தை முடிப்பதற்கு பல ஆண்டுகள் எடுக்கலாம். எனவே தான் ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இவை இடம்பெறவேண்டும் என நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அவ்வாறு நடைபெற்றால் நிச்சயம் மாற்றம் வரும்.

ஆயிரம் ரூபா மட்டுமல்ல மலையக மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களும் அவசியம். சுயதொழில் வாய்ப்பு உட்பட மேலும் பல விடயங்கள் ஊடாக வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஒற்றுமை இல்லை. இரு அணிகளாக பிரிந்து செயற்படுகின்றனர். எனவே, ஆட்சியை பிடித்து இவர்கள் மக்களுக்கு சேவை செய்வார்களா? எனவே, இவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் வீணானவையாகவே அமையும். தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here