பழம்பெரும் பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்!

பழம்பெரும் நடிகை எம்.என். ராஜமின் கணவரும் பின்னணிப் பாடகருமான ஏ.எல். ராகவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

அய்யம்பேட்டை லட்சுமணன் ராகவன் என்கிற ஏ.எல்.ராகவன் 1933-ல் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பிறந்தார். 10 வயது முதல் பால கான விநோத சபாவில் பாடகராக இருந்த ஏ.எல். ராகவன், 1947-ல் கிருஷ்ண விஜயம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் பால கிருஷ்ணன் வேடத்தில் நடித்தார். திரைப்படங்களின் பின்னணிப் பாடகராகவும் இருந்த ஏ.எல். ராகவன், ஆரம்பக் காலங்களில் பெண் குரல்களிலும் பாடியுள்ளார். பிறகு புதையல் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘ஹலோ மை டியர் ராமி’ என்கிற பாடலின் மூலம் ஆண் குரலில் பாட ஆரம்பித்தார். இதன்பிறகு இவர் பாடும் பாடல்களுக்கென்று தனியாக ரசிகர்கள் உருவானார்கள். சில படங்களையும் அவர் தயாரித்துள்ளார். எல்.ஆர். ஈஸ்வரி, கே. வீரமணி, மலேசியா வாசுதேவன் போன்ற பிரபல பாடகர்களை வைத்து மேடையில் மெல்லிசைக் கச்சேரி செய்த முதல் நபர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

மே 2, 1960-ல் ஏ.எல். ராகவனும் பிரபல நடிகை எம்.என். ராஜமும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள். 1963-ல் பிரம்மலக்‌ஷ்மணனும் 1969-ல் நளினா மீனாக்‌ஷியும் பிறந்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த எம்..என். ராஜம் 2007 வரை துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை ஏ.எல். ராகவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஏ.எல். ராகவனின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here