முதுகெலும்புள்ள அரசியல் தலைமையின் தேவையை தமிழர்கள் உணர்ந்துள்ளனர்!

தமிழ் மக்களினுடைய உரிமையையும், பாதுகாப்பையும் முன்னெடுத்து செல்வதற்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமை தேவை என்பதனை தமிழ் மக்கள் உணர்ந்திருப்பதாக முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தற்சமயம் ஒரு பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தல் ஊடாக ஆவணி மாதம் ஐந்தாம் திகதிக்கு பின்னர் ஒரு புதிய அரசாங்கம் ஆட்சியை அமைக்க இருக்கிறது.

தற்சமயம் ஆட்சியில் இருக்கக்கூடிய ஜனாதிபதி சிங்கள, பௌத்த இராணுவ ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார். இது தமிழ் மக்களை பொறுத்தமட்டில் ஆபத்தான ஒரு கட்டத்தை நோக்கி செல்வதை அவதானிக்க முடியும்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற இராணுவ தளபதி உட்பட சிங்கள பௌத்த துறவிகளை உள்ளடக்கியே அந்த செயலணி அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வடக்கிலும் அமைப்பதற்கு எண்ணுகின்றார்கள்.

வடக்கு,கிழக்கு மாகாணம் ஏற்கனவே இரண்டாக துண்டாடப்பபட்டிருக்கின்ற நிலையில் மீண்டும் சிங்கள, பௌத்த இராணுவ மேலாதிக்கத்தை திணிக்கும் நிலைமையை நோக்கி இந்த அரசாங்கம் சென்று கொண்டிருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்கள் இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் இந்த பாராளுமன்ற தேர்தலிலே வாக்களிக்க உள்ளனர். கடந்த காலத்திலே தமிழ் மக்கள் நம்பி வாக்களித்த தலைமைகள் மாறி மாறி வந்த அரசாங்கங்களிற்கு விலை போனமையே இந்த நிலைமை ஏற்பட்டதற்கு காரணம்.

ஆகவே இந்த பாராளுமன்ற தேர்தல் ஊடாக உறுதியான, கொள்கையோடு தமிழ் மக்களினுடைய உரிமையையும், அபிவிருத்தி ,பாதுகாப்பையும் முன்னெடுத்து செல்வதற்கு
முதுகெலும்புள்ள அரசியல் தலைமை தேவை என்பதனை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே கடந்த காலத்திலே விலை போன தலைவர்களை நிராகரித்து தமிழ் மக்களுக்கு ஒரு உறுதியான தலைமை வேண்டும் என்ற செய்தியை இந்த பாராளுமன்ற தேர்தல் நிச்சயமாக சொல்லும் என்றார்

நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனியின் செயலாளர் அமரர் க.பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் நகரசபை தலைவர் இ.கௌதமன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here