சுகாதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனையில் பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்பு!

கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் உணவகங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.

உணவகங்கள் மக்களின் பாதுகாப்பு கருதி சுகாதார முறைப்படி வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கானின் வழிகாட்டலில் அலுவலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உணவகங்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முப்பது உணவகங்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏழு உணவங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், உணவகங்களில் இருந்து பாவிக்க முடியாத நிலையில் இருந்து கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்கள் மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டது.

உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிட்டதோடு, உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு சுகாதார முறைகள் தொடர்பில் கையாளும் விதம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் பேணி உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும், கொரோணா காலத்தில் சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும், மீறி செயற்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here