மைத்திரி, ரணிலிடமும் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நான்கு பேரிடம் மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மேலதிகமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக செயற்பட்ட எஸ்.பாஸ்கரலிங்கம் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் வசந்த குமார் ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர், அரச சட்டவாதி நிஷார ஜயரத்ன கேசரிக்கு தெரிவித்தார்.

கடந்த 2015 பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கும் 2016 மார்ச் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற பிணை முறி விநியோகம் தொடர்பில் ஆராய்தல், விசாரணை செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் நிமித்தம் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பரிந்துரைகளை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அந்த விசாரணையின் ஒரு அங்கமாக இந்த மேலதிக சட்ட ஆலோசனைகள் சட்ட மா அதிபரால் இன்று இவ்வாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டதாக அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் அந்த ஆலோசனைக்கு அமைய குறித்த நால்வரினதும் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்களின் வாக்கு மூலங்களின் பிரதிகளை காலம் தாழ்த்தாது தமக்கு அனுப்பி வைக்குமாரும் சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய ஆலோசனையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here