யாழில்10,000 ஏக்கர் காணி விடுவித்து விட்டோம்: யாழ் இராணுத்தளபதி!

இன்றுவரை யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படையினரால் 10ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி, முப்படை உயர் அதிகாரிகள் தலைமையில் பலாலியில் உயர் மட்ட கூட்டமொன்று நேற்று இடம்பெற்றது. இது தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தினராகிய நாங்கள் பாதுகாப்பு விடயம் தொடர்பில் மிகவும் அக்கறையாகவும் தெளிவாகவும் செயற்பட்டு வருகின்றோம். அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாப்பு விடயம் தொடர்பில் செயற்பட்டு வருகின்றார்.

அவர் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இது போன்ற விசேட கூட்டங்கள் முப்படையினருடன் இடம்பெற்று வருகின்றது. எனவே நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒரு முக்கியமான கூட்டமாக எனக்கு தென்படவில்லை.

ஏனெனில் கடந்த டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படையின் பிரதானிகளுடன் குறித்த கூட்டம் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது. எனவே நேற்றைய தினம் விசேஷமாக ஒன்றும் பேசப்படவில்லை. அதிலும் குறிப்பாக காணி விடுவிப்பு பற்றி எந்த விடயமும் அதில் பேசப்படவில்லை. ஏனெனில் நாங்கள் இன்று வரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவித்துள்ளோம்.

எங்களால் விடுவிக்கப்படக் கூடிய அனைத்து இடங்களையும் இன்றுவரை விடுவித்துள்ளோம். எனினும் எதிர்காலத்தில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here