அம்பாறையில் இருப்பை தக்க வைக்க பேதங்களை களைந்து வாக்களியுங்கள்

2020 தேர்தல் களத்திலே தமிழர்கள் அனைவரும் ஒன்றாய், ஒருமித்து வாக்குகளை அளிக்காவிடில் எமது இருப்பை இழந்து அயல் சமூகத்திடம் கையேந்தும் அரசியல் அநாதையாவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் னுசு.இரா.சயனொளிபவன் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 21 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும், 30 சுயேட்சை குழுக்களும் உள்ளடங்கலாக மொத்தமாக 510 வேட்பாளர்கள் வெறுமனே 7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றனர். இதனில் குறிப்பாக பிரதான தேசிய கட்சிகளாக பொதுஜன பெரமுன, சஜித் தலமையிலானா ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பலம் வாய்ந்த கட்சிகளாகவும் அதற்க்கு அடுத்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் றிசாட் பதியுதீன் தலைமையிலானா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ளது .

மொத்தமாக அம்பாறை மாவட்டத்திலே வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 510, 000 ஆகும். இதனில் அண்ணளவாக 180,000 வாக்குகள் சிங்கள மக்களினுடையதாகவும், 240000 முஸ்லிம் மக்களாகவும், 94000 தமிழ் மக்களின் வாக்குகளாவும் காணப்படுகின்றது. கடந்த கால தேர்தல் புள்ளி விபர அடிப்படையில் குறிப்பாக சிங்கள மக்களின் வாக்களிக்கும் விகிதம் 85 வீதமாகவும், முஸ்லிம் மக்களின் வாக்களிக்கும் விகிதம் 75 வீதமாகவும், தமிழ் மக்களின் வாக்களிக்கும் விகிதம் 60 வீதமாகவும் காணப்படுகின்றது.

நிச்சயமாக சிங்கள மக்களிடையே பொதுஜன பெரமுன ஒரு உறுதியான கட்சியாக தென்படுகின்றது. எனவே பெரும்பான்மை சிங்கள வாக்குகள் அண்ணளவாக 70 வீதமாக்கு மேற்பட்ட வாக்குகள் பொதுஜன பெரமுனக்கே அளிக்கப்படும். இதற்கு அடுத்த படியாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது சிங்கள மக்கள் இடையையும் அதே போன்று பெருபான்மை முஸ்லீம் மக்களின் வாக்குகளையும் சுவீகரித்து கொள்ளக்கூடிய ஒரு பலமான கட்சியாக அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் உள்ளது.

பிரதானமாக முஸ்லிம் காங்கிரஸ் இக்கட்சியுடன் இணைந்து செயற்படுவது ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில் ஒரு பலம் என்றே கூறவேண்டும். மேலும் குறிப்பாக 3 முன்னால் முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு நியமன உறுப்பினர் இக் கடைசியில் களமிறங்குவது அதிகப்படியான முஸ்லீம் வாக்குகளை பெறுவதற்கு சாதகமான ஒன்றாகும்.

இதற்கு அடுத்த படியாக பல்வேறு பட விமர்சனங்கள், பலவீனங்கள் இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியும் ஓரளவுக்கு வாக்குகளை திரட்டி ஒரு ஆசனத்தை தட்டி செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக இக் கட்சியிலே போட்டியிடும் தயா கமகே இன் பாரியார் அனோமா கமகே கடந்த காலங்களில் விவசாய மற்றும் நீர்வள அபிவிருத்தி, பெற்றோலிய மற்றும் கனியவள பிரதி அமைச்சராக பதவி வகித்தவர் என்பதனால் தனிப்பட்ட வாக்கு வங்கியினை கொண்டுள்ளதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மேற்கூறிய அடிப்படையில் பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகள் தமக்கிடையே 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனத்தையும் தங்களிடையே பங்கு போட்டுக ;கொள்ளும் .

இப்பொழுது கேள்வி என்னவெனில் எஞ்சி உள்ள ஒரு ஆசனத்தை தட்டி செல்ல போவது தமிழ் தேசிய கூட்டமைப்பா? அல்லது அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸா? இல்லை றிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸா? இன்னும் விரிவாக பார்த்தல் றிசாட் பதியுதீன் உடைய கட்சி ஒரு ஆசனத்திற்கான வாக்குகளை பெறுவது என்பது மிக கடினமான ஒரு விடயம். எனவே உண்மையான போட்டி அடுத்த ஆசனம் தமிழ் மக்களுக்கானாதா இல்லை அதாவுல்லாக்கானாதா என்பதே ஆகும். ஆகவே உண்மையான போட்டி தமிழ் மக்களுக்குக்கிடையில் கிடையாது. நாம் எமக்குள் வாக்கிற்காகவும், தனிப்பட்ட நன்மைகளுக்காவும் பிரிந்து நிற்பதால் எந்த சாத்தியமான விளைவுகளும் அடைய போவதில்லை. நிச்சயமாக இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே உருவாகி உள்ள பிரதிநித்துவ போட்டியாகவே இதனை நாம் கண் கொண்டு பார்க்க வேண்டும்.

முஸ்லிம் கட்சிகள் பிரிந்து கொண்டமை குறிப்பாக றிசாட் தனித்தும் அதாவுல்லா தனியாகவும் போட்டியிடுவது ஒரு சாதகமான விடயமாக நாம் உற்று நோக்க வேண்டும். மேலும் முஸ்லீம் மக்களிடையே எழுந்துள்ள சமகால அரசியல் அதிருப்தி குறிப்பாக கொவிட் 19 இன் நோய் தொற்று காலப்பகுதியில் இறந்த உடல்கள் அவர்களது மத அனுட்டானங்களை பின்பற்றாமல் எரிக்க பட்டது, இதற்கான தீர்வு அரசியல் வாதிகளினால் பெற்று கொடுக்க முடியாமல் போனது மற்றும் சாய்ந்தமருது நகரசபை பிரச்சனை என்பன குறித்த சில வேட்பாளர்களின் உடைய வாக்கு வங்கியினை குறைக்கும் சாத்தியம் உள்ளது. இதனை எமக்கு சாதகமாக பயன்படுத்தும் பகுத்தறிவே தற்போதைய சூழ்நிலையில் கால கட்டாயமான தொன்றாகும்.

ஆனால் தமிழ் மக்கள் எம்மிடையே பல வேற்றுமைகள், கட்சி வேறுபாடுகள் காரணமாக எமக்கான பிரதிநிதித்துவத்தை இழக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. 93000 தமிழ் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறுபட்ட கட்சிகளும் அதனுடைய வேட்பாளர்களும் களமிறங்கபட்டுள்ளனர். ஆனாலும் இக் கட்சிகளின் இடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பலம் வாய்ந்த கட்சியாக காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக இத் தேர்தலில் இளைஞர்கள் பலர் கூட்டமைப்பில் களம் இறங்கி உள்ளது மேலும் வாக்கு பலம் சேர்க்கின்றது.

அனைத்திற்கும் அப்பால், தமிழ் மக்கள் ஆகிய எம் ஒவ்வொருவருக்கும் எம் இனம் மீதான பற்றும், எம் இருப்பினை காப்பாற்ற வேண்டிய கடமைப் பாடும் நிச்சயமாக காணப்பட வேண்டும். இதனடிப்படையில், எமது முதற் தலையாய கடமையானது அனைத்து தமிழ் வாக்குகளையும் முழுமையாக செலுத்தி எமது வாக்கு பலத்தை எடுத்துரைக்க வேண்டும். எமது தமிழ் இருப்பை நிலை நிறுத்த, அரசியல் அனாதை ஆகி விடாமல் எமக்கென ஒரு பிரதிநிதித்துவத்தை இழக்காமல் இருபதற்காக நாம் அனைவரும் அணி திரண்டு வாக்கு அளிக்க வேண்டும். இதனிலும் முக்கியமாக, தடம் மாறா தேசிய பாதையுடன் இணைந்த அபிவிருத்தி எனும் அரசியல் கொள்கையில் பயணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பது சிறந்த தெரிவு எனவும் இரா சயனொளிபவன் குறிப்பிட்டார்.

எனவே தமிழ் மக்கள் அனைவரும் தனிப்பட்ட குரோதங்கள், கட்சி வேறுபாடுகள் என்பவற்றை களைந்து எமது இருப்பை தக்கவைத்து கொள்ள ஒன்றாக அணி திரண்டு ஒரு ஆளுமையான பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here