கோட்டா வந்தால் வெள்ளைவான் வருமென்றார்கள்; இப்பொழுது ஆதரவென்கிறார்கள்; கூட்டமைப்பிற்கு இரட்டை நாக்கு: போட்டுத் தாக்கும் சிறிகாந்தா!

கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் என்று கடுமையாக விமர்சித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு ஆதரவு வழங்குவதாக கூறி வருகின்றனர் இந்த செயற்பாடானது இரட்டை நாக்கு அரசியலையே வெளிக் காட்டுகின்றது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் வெள்ளைவான் கடத்தல் ஆரம்பமாகும் என்று சொல்லி தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு இருந்தனர். அதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது கோட்டாபய அரசுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றனர்.

கோட்டாபய அரசாங்கம் தற்பொழுது வடக்குக்கும் கிழக்குக்கும் செயலணிகளை உருவாக்கி தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனை பல தரப்புக்களும் கண்டித்து வருகின்றனர் இவ்வாறான ஒரு நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவரது அரசுக்கு ஆதரவு தருவோம் என கூறி வருகின்றனர்.

கூட்டமைப்பினர் கடந்த காலத்திலும் ஆட்சியிலிருந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி முண்டு கொடுத்து வந்தனர். தற்போது கோட்டாபய அரசாங்கத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் தாம் அதனை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று பகிரங்கமாகவே கூறிவருகின்றனர்.

கோட்டாபய அரசாங்கம் 19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி கொண்டு இருக்கின்ற போது அதற்கு ஆதரவு தருவோம் என்ற சமிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வெளிக்காட்டி வருகின்றது. எம்மை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது. அவர்கள் அரச மாளிகைகளில் விருந்தினர்களாக உலா வருவதற்கு மட்டுமே விரும்புகின்றார்கள்.

கோட்டாபய அரசாங்கத்திற்கும் தாம் ஆதரவு வழங்குவதாக தற்போது கூறி வருகின்றமையானது இரட்டை நாக்கு அரசியலாகவே நாம் கருதுகின்றோம்.

கடந்த காலங்களில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை வான் கடத்தல்கள் மீண்டும் ஆரம்பமாகும் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த கூட்டமைப்பு இப்போது அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றது. எனவே தமிழ் மக்கள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here