அபிவிருத்திக்காக மாத்திரம் எமது இளைஞர்கள் உயிர்தியாகம் செய்யவில்லை!

பல தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு பலத்தினை உடைப்பதற்க்காக அரசாங்கத்தினால் களமிறக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் கட்சிகளை இணைத்திருந்த கட்சிகள் கூட தமிழ் தேசிய கூடடமைப்பினை உடைக்க வேண்டும் என்ற ரீதியில் அரசாங்கத்தின் ஆலோசனையை பெற்று தனியான தமிழ் மக்கள் வேட்ப்பாளர்களை மாத்திரம் கொண்டதான கட்சிகளை அமைத்துக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தற்கால அரசியல் நிலவரம் தொடர்பாக தமது அரசியல் பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதிலும் எதிர்கால அபிவிருத்தியை உருவாக்குவதிலும் மக்களின் அபிலாசைகளை பூரணமாக தீர்ப்பதிலும் தமது பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளது.

ஒரு வகையிலே அபிவிருத்தி தேவையாகவுள்ளது. அபிவிருத்திக்காக மாத்திரம் எமது இளைஞர்கள் கடந்த காலத்தில் தியாகங்களை மேற்கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசையான அரசியல் உரிமை இந் நாட்டில் கிடைக்கப் பெறவேண்டும். இந்த நாட்டின் ஜனாதிபதியும் கூட இனவாதத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு தொல் பொருள் என்ற போர்வையில் இராணுவத்தினையும் பௌத்த குருமார்களையும் நூறு வீதம் சிங்கள அதிகாரிகளைக் கொண்டதாக ஒரு ஜனாதிபதி செயலணியை அமைத்து இந்த மக்களின் வாழ்விடங்களை தொல் பொருள் என்ற போர்வையில் சுவீகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கல் திட்டத்தினை தடுத்து நிறுத்துவது அரசாங்கம் வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிப்பதற்க்காக மேற்கொள்கின்ற அத்தனை நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துகின்ற வல்லமை தமிழ் தேசிய கூட்டமைப்பில்தான் இருக்கிறது.

தமிழ் மக்களின் கட்சிகள் என்ற போர்வையில் களமிறங்கியுள்ள கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தின் பின்னனியில் செயல்படுபவை. அவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட முடியாது. தங்களது பதவிகளை பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே அவர்களால் தமிழ் மக்களுக்கு விரோதமாக உருவாக்கப்படுகின்ற அரசின் செயல் திட்டங்களை முறியடிக்க முடியாது.முறியடிக்கக் கூடிய அத்தனை வல்லமையும் தமிழ் தேசிய கூட்டப்பிற்கு மாத்திரம் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here