3,000 ஆண்டுக்கு முற்பட்ட 13 அடி நடுகல் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் தூத்துக்குடியில் சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையான 13 அடி உயரமுள்ள நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு நடந்து வரும் நிலையில், வெளியே தெரிந்த இந்த நடுகல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ளது உழக்குடி. இந்தக் கிராமத்திலுள்ள குளத்தின் அருகில் தென்மேற்குத் திசையில் களியங்காடு என்ற அடர்ந்த காடு ஒன்று உள்ளது. உழக்குடியிலிருந்து கலியாவூர் செல்லும் சாலையின் ஓரமாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடை தோண்டினார்கள்.

அப்போது பல வகையான மட்பாண்டங்கள் உடைந்த நிலையில் வெளிப்பட்டன. தற்போது அவ்விடத்தில் மழைநீர் சேகரிப்பு தடுப்பணை கட்டுவதற்குக் குழி தோண்டியபோது பல தொன்மையான பொருள்களும் வெளிப்பட்டன.

அப்பொருள்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகும். கறுப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டம், பளபளப்பான கறுப்புநிற மட்பாண்டம், உள்புறம் கறுப்பு, வெளிப்புறம் சிவப்பு நிற மட்பாண்டம், மண்ணாலான நீர் வடிகட்டி, விளையாட்டுப் பொருள்கள், பானைகளுக்குக் கீழ் வைக்கப் பயன்படுத்திய பரிமனைகள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், இதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகமாசான சுடலை என்ற வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர், உழக்குடியிலுள்ள காட்டுப் பகுதியில் மருகால் தலை சமணர் படுகைக்கு அருகில் நடுக்காட்டுக்குள் சுமார் 1 கி.மீ தொலைவில் 13 அடி உயரமான நடுகல் ஒன்றை உழக்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளார். இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆகழாய்வு இயக்குநர் பாஸ்கர், தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் லோகநாதன் மற்றும் ஆய்வு மாணவர்கள் அடங்கிய குழுவினர் உழக்குடிக்குச் சென்று அந்த நடுக்கல்லைப் பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here