லீசிங் மோட்டார் சைக்கிளால் சிக்கிய கைத்தொலைபேசி திருடர்கள்!

வீதியில் சென்றவர்களின் கைத்தொலைபேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 1 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றுஉத்தரவிட்டது.

கடந்த 15.5.2020 அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதியில் பட்டப்பகலில் வீதியில் தனியாக சென்றவர்களின் பெறுமதியான கைத்தொலைபேசிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பறித்து செல்லப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சி.ஐ றபீக் வழிகாட்டலில் சுமார் ஒரு மாத காலமாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக மேற்குறித்த வீதிகளில் கைத்தொலைபேசிகளை பறித்து சென்ற இருவர் புதன்கிழமை(17) கைதாகினர்.

குறித்த கொள்ளையர்கள் கைத்தொலைபேசிகளை பறித்து செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை சிசிடிவி காணோளி காட்சியினை அடிப்படையாக கொண்டு இனங்கண்ட பொலிஸார் பாலமுனை பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய உறவு முறை சகோதரர்களை  கைது செய்தனர்.

சிசிரிவி காட்சி உதவியுடன் வாகன இலக்கம் அடையாளம் காணப்பட்டது. அந்த வாகன இலக்கத்தை பரிசீலித்ததில், அந்த பகுதி லீசிங் நிறுவனமொன்றில் பெறப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. பெண்ணொருவரின் பெயரில் அந்த மோட்டார் சைக்கிள் வாங்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பெண்ணிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றபோது, தனது மகனிற்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்ததை தெரிவித்தார்.

இதையடுத்தே, பெண்ணின் மகனாக கைத்தொலைபேசி திருடனும், அவனது உறவினனான இன்னொரு இளைஞனும் கைதாகினர்.

கொள்ளையடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைதான சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here