பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை தேசிய சபை நியமிக்கும்: கணபதி கணகராஜ்

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒற்றுமையாகவும், சிறப்பாகவும் செயற்படுகின்றது. கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை. பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை தேசிய சபை நியமிக்கும்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று (17) நியமிக்கப்பட்டார். பொதுச்செயலாளராக செயற்பட்ட அனுஷியா சிவராஜாவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கணபதி கணகராஜ் கூறியதாவது,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதன்பின்னர் பேராளர் மாநாட்டின் அனுமதியுடன் தேசிய சபைக்கூடியது. இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

அதேபோல் இதுவரைகாலமும் பொதுச்செயலாளராக செயற்பட்டுவந்த அனுஷியா சிவராஜா கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சி வீரியமாக செயற்படவேண்டிய காலகட்டம் இது. எனவே, பொதுச்செயலாளர் பதவிக்கு ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு கட்சியின் பல மட்டங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதற்கமையவே தேசிய சபைக்கூடி அந்த நியமனத்தை உறுதிப்படுத்தியது.

எங்களுடைய தலைவர் இருக்கிறார் என்ற இறுமாப்புடனேயே எமது பயணம் தொடர்கின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை நியமிப்பது குறித்து தேசிய சபை முடிவெடுக்கும்.

எதிர்கால பயணத்தை தொடர்பதற்காக கட்டுக்கோப்புடன் கட்சி ஒன்றுமையாக இருக்கின்றது. நீங்கள் கூறுவதுபோல எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஜீவன் தொண்டமான் தனது தந்தையின் வழியில் இ.தொ.காவில் நீண்டகாலம் செயற்பட்டவர். அவர் ஒரு சட்டத்தரணி, படித்தவர். எனவே, சிறப்பாக செயற்படுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றிபெறுவார்கள். கண்டி, பதுளையிலும் வெற்றி உறுதி அதற்கேற்ற வகையிலேயே வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here