இ.தொ.கவிற்குள் எந்த பிளவுமில்லை: ரமேஷ்வரன்!

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படுவார்” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று (17) நியமிக்கப்பட்டார். பொதுச்செயலாளராக செயற்பட்ட அனுஷியா சிவராஜாவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரமேஷ்வரன் கூறியவை வருமாறு.

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு, தேசிய சபை, நிர்வாக சபை ஆகியவற்றிலுள்ள உறுப்பினர்கள் இன்று காலை கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ். வளாகத்தில் ஒன்றுகூடினர்.

இதன்போது கட்சியின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமானை நியமிப்பதற்கு மூன்று கட்டமைப்புகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தன. பிரதி தலைவராக அனுஷியா சிவராஜா அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரசுக்குள் ஏதாவது பதவியை வழங்கவேண்டுமெனில் பேராளர் மாநாடு, தேசியசபை, நிர்வாக சபை என்பனகூடியே தீர்மானம் எடுக்கவேண்டும். அந்தவகையிலேயே மேற்படி கூட்டங்கள் இன்று கூட்டப்பட்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இ.தொ.காவுக்கான புதிய தலைவர் பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சி மாநாட்டைக்கூட்டி தெரிவுசெய்யப்படுவார்.

காங்கிரஸை என்பது எமது குடும்பம். உறுப்பினர்கள் அனைவரும் சகோதரர்களாகவே செயற்பட்டுவருகின்றனர். ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள்போல எவ்வித முரண்பாடுகளும், குரோதங்களும் எம்மிடையே இல்லை.” – என்றார்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here