குளிப்பதை வீடியோ எடுத்த காமுகர்கள்: தீ வைத்த மாணவி மரணம்!

வேலூரில் வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில், தீக்குளித்த பள்ளி மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், நடப்புக் கல்வியாண்டில் ப்ளஸ் 1 செல்லவிருந்தார். இந்த மாணவி, தன் வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை மாணவியிடமே காண்பித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியில் கூற முடியாமல், கடந்த 13-ம் தேதி, மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் மாணவியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், `மாணவி உயிர் பிழைப்பது சந்தேகம்’ என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். சம்பவத்தின் வீரியத்தை உணர்ந்த பாகாயம் போலீஸார் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மாணவியிடம் `வாக்குமூலம்’ பெற்று வீடியோவாக பதிவு செய்தனர்.

வாக்குமூல வீடியோவில் மாணவி, ‘நான் குளிக்கிறதை வீடியோ எடுத்தவனுங்க ஐந்தாயிரம் ரூபாய் கேட்டு மிரட்டுனாங்க. என் சித்திகிட்ட நடந்ததைச் சொல்லி பணம் கேட்டேன். அவனுங்களுக்கு பணம் தரவேண்டாம். நாம போலீஸ்கிட்ட போவோம்னு சித்தி சொன்னாங்க. அதுக்குள்ள அவனுங்க திரும்பவும் போன் பண்ணி, ‘வேலூர் கோட்டைக்கு வா…’னு கூப்பிட்டாங்க. நான் முடியாதுனு சொல்லிட்டேன். பக்கத்துல இருக்கிற ஏரிக்கரை மலைக்காவது வாடினு சொன்னாங்க. நானும் அங்க போனேன்.

மூணு பேர்ல ஒருத்தனை பிடிச்சு வச்சுட்டு சத்தம் போட்டேன். அப்ப ரெண்டு பேர் ஓடிட்டானுங்க. பிடிபட்டவன்கிட்ட இருந்த செல்போனை பிடுங்கி அதிலிருந்த நான் குளிக்கிற வீடியோவை டெலிட் பண்ணேன். அதுல, என் பாட்டி குளிக்கிற வீடியோ மட்டுமல்ல நிறைய பொண்ணுங்க குளிக்கிற வீடியோவும் இருந்துச்சி. எல்லா வீடியோவையும் நான் டெலிட் பண்ணிட்டு இருந்தப்போ, என் தலையில் கல்லால் தாக்கிட்டு அவனும் ஓடிட்டான். அப்புறம் நான் வீட்டுக்கு வந்து கொளுத்திக்கிட்டேன்’’ என்று அந்த மாணவி கூறியிருக்கிறார்.

மாணவியின் வாக்குமூலத்தை வைத்து வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இரண்டு நாள்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அந்த மாணவி நேற்று (16-ம் தேதி) இரவு மரணமடைந்தார். உடற்கூறாய்வுக்குப் பின்னர் மாணவியின் சடலம் இறுதி அஞ்சலிக்காகப் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. மாணவிக்கு ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்திற்கு பல்வேறுத் தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

‘இந்தச் சம்பவத்தில், மேலும் சில இளைஞர்களுக்கும் தொடர்பிருக்கிறது. ஆபாச வீடியோவைக் காட்டி அவர்களும் மாணவியிடம் அத்துமீறியிருக்கிறார்கள். காவல் துறையினர் அந்த நபர்களையும் கைதுசெய்ய வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகவும் விரைவாகவும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை பெண் குழந்தைகளிடமும் பெண்களிடமும் தவறாக நடந்துகொள்ள நினைப்பவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும்’ என்று கூறி ஓர் அமைப்பினர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here