ஹுலை எதிரியாக பார்க்காமல் அவரது ஆலோசனையை கேளுங்கள்!

நீதியான முறையில் தேர்தலை நடத்துவதற்காக அனைத்து தரப்பினரும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான கலாநிதி வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தலுக்கான மக்கள் சந்திப்பு அட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு பிரசாரத்தை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கட்சி செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. பாரிய கூட்டங்களை இம்முறை நடத்த முடியாது. வீடுகளுக்கு சென்றே பரப்புரை செய்யவேண்டும். அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு சார்பாக எதையாவது சொன்னால் அக்குழுவை பாராட்டுவதும், விமர்சனங்களை முன்வைத்தால் ஆளுங்கட்சியனரால் அதற்கு எதிராக கருத்துகளை முன்வைக்கும் நிலையும் தற்போது நீடிக்கின்றது.

குறிப்பாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல், அரசாங்கத்தை விமர்சிக்கவில்லை. மாறாக தனது நிலைப்பாடுகளையே அவர் ஆணித்தரமாக குறிப்பிட்டு வருகின்றார். ஆனால், அவர் எதிரியாக பார்க்கப்படுகின்றார். தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை விமர்சிப்பதைவிடுத்து, அவர்களால் முன்வைக்கப்படும் யோசனைகளை அரசாங்கமும், அமைச்சர்களும் நிறைவேற்றவேண்டும்.

அத்துடன் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்கவேண்டும். அதேபோல் அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும்.” – என்றார்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here