வாள்வெட்டு குழுவென கைதான 24 இளைஞர்களிற்கு விளக்கமறியல்!

சுன்னாகம் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, கைதான வாள்வெட்டுக்குழு சந்தேகநபர்கள் 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருவரை ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்து நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுன்னாகம் இலங்கை வங்கி கிளைக்கு அண்மையான பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் மாலை பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த ரணா பிரசாத் (24) மருதனார்மடத்தைச் சேர்ந்த நெல்லையா நேமிநாதன் (20) ஆகிய இருவரது பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

இந்தக் கொண்டாட்டம் தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார், நேற்று மாலை 5 மணியளவில் பிறந்தநாள் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றனர். நிகழ்வில் பங்கேற்ற 40இற்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வாள்வெட்டுக்குழு உறுப்பினர்கள் என அவர்கள் மீது குற்றம்சுமத்திய பொலிசார், 26 பேரை கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் 26 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முற்படுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

சந்தேக நபர்கள் சட்டவிரோதமான கூட்டத்தைக் கூடியிருந்தனர். வன்முறை ஒன்றுக்குத் தயாரான நிலையில் இருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களின் கைவிரல் ரேகைகள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் விவரங்கள் வடக்கு மாகாணத்திலுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வேறு பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் இருந்தால் சந்தேக நபர்களை ஒப்படைக்க வசதியாக அவர்களை விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்று அவர் நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார்.

எனினும், சந்தேகநபர்கள் சார்பில் முன்னலையான சட்டத்தரணிகள் அதை மறுத்து, அவர்கள் பிறந்தநாள் கொண்டாடவே கூடியதாக தெரிவித்தனர்.

முற்படுத்தப்பட்டவர்களில் 16 வயதிற்கும் குறைந்த இருவரின் பெற்றோரை அழைத்து, எச்சரிக்கை செய்த பின்னர், அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

ஏனைய 24 பேரின் உடை, தோற்ற, அலங்காரங்களை கண்டித்த நீதிவான், அவர்களை 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here