கோட்டாவிற்கு அவசர கடிதம் அனுப்பிய சீ.யோகேஸ்வரன்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக சுகாதார விதிமுறைகளை பேணுதலைக் கருத்திற்கொண்டு இம்முறை கிழக்கிலிருந்து பாதயாத்திரை செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றிணை அனுப்பி வைத்துள்ளார்.

கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

இலங்கையில் முருகப்பெருமான் குடிகொண்டு திருவருள் பாலிக்கும் முக்கிய தலமாகக் கருதப்படும் கதிர்காம முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் இந்து தமிழ் மக்களும், சிங்கள மக்களும், பாதயாத்திரையாக செல்வது பல்லாண்டு காலமாக நடாத்தப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும் அடியார்கள் தங்களது நோக்கங்கள், துன்பங்கள், அவசியத் தேவைகளை வேண்டுதல் செய்து நேர்த்தி வைத்து அது நிறைவேறியதும் தமது பாதயாத்திரையை பக்தி பூர்வமாக மேற்கொள்கின்றனர்.

இவ்வடியார்களில் ஒருவராக முருகனும் செல்வார் என்பது நீண்டகால நம்பிக்கை ஆகும். பல அற்புதங்களும் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு நிகழ்ந்துள்ளது.

இவ்வேளை இக்கொரோணா வைரஸ் பரவல் காரணமாக சுகாதார நிலையைப் பேணும் அவசியத்தின் நிமிர்த்தம் இம்முறை கிழக்கில் இருந்து பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக அறிகின்றோம். இவ்விடயமாக தாங்களும் அறிவித்தல் விடுத்துள்ளீர்கள் என்பதையும் அறிவோம்.

ஆனால் இவ் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தாங்கள் இம்முறை யாத்திரை செல்வது தடைப்பட்டால் தங்களுக்கு இதன் மூலம் பாதகமான சம்பவங்கள் ஏற்படலாம் என கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தயவுசெய்து தாங்கள் கிழக்கின் கதிர்காம பாதயாத்திரிகளுக்கு விடுத்துள்ள தடையினை மீள்பரிசீலனை செய்து சகல சுகாதார அறிவுறுத்தலின் கீழ் இப்புனித கதிர்காம ஆன்மீக பாதயாத்திரை நடாத்துவதற்கு உதவுமாறு கதிர்காம யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து அடியார்கள் சார்பாகவும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை தங்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

பொதுவாக இப்பாதயாத்திரை பயணமானது ஆன்மீகத்தை மேம்படுத்துவதுடன் இந்து, பௌத்த மக்களிடையே இந்நாட்டில் மத ஒற்றுமையை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

ஆகவே இப்புனித கதிர்காம யாத்திரையை மேற்கொள்வதற்கான அனுமதியை யாத்திரை மேற்கொள்ளும் அடியார்களுக்கு சுகாதார செயற்பாடு, நிபந்தனைகளுக்கு அமைய வழங்கி உதவுமாறு தங்களிடம் கோருவதுடன் இவ்விடயம் சார்பான தங்களின் அன்பான பதிலை பணிவுடன் எதிர்பார்க்கின்றோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் நாட்டின் பிரதமர், கதிர்காமம் முருகன் ஆலய நிலமை (பொறுப்பாளர்), சுகாதார பிரதம பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொணராகலை மாவட்டங்களின் பிராந்திய சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here