5 வருடத்தில் 88,000 பேர் முஸ்லிமாக மதமாற்றம்… இலங்கை முஸ்லிம் நபர் ஐ.எஸ் முக்கிய பொறுப்பில்: ஞானசாரர்!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கல்விப் பிரிவுக்கு பொறுப்பாக இலங்கையரான இசாக் என்பவர் செயற்படுவதாக, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்தார். உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், கடந்த 5 வருடத்தில் 88,000 முஸ்லிம் அல்லாதவர்கள், மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ளார்.

இலங்கையில் தப்லீக், தெளஹீத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான் ஆகிய சிந்தனைகள் ஊடாகவே அடிப்படைவாதம் விதைக்கப்படுவதாகவும், உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களும் அவ்வாறான சிந்தனைகள் உருவானவர்கள் எனவும் அவர் சாட்சியமளித்தார். அத்துடன் இலங்கையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தலையீடு செய்யும் அகில இலங்கை ஜம் ஈய்யதுல் உலமா சபையிலும் இந்த 4 சிந்தனைகளையும் கொண்டவர்களே உள்ளடங்குவதாகவும், அது பாரிய ஆபத்தானது எனவும் ஞானசார தேரர் சாட்சியமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்களை விசாரணை செய்யும் ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் நேற்று (15) சாட்சியமளித்தபோதே இதனை தெரிவித்தார்.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

சிரேஷ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் ஞானசார தேரர் சாட்சியமளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:

“இலங்கையில் முக்கியமாக 4 சிந்தனைகளின் கீழ் இயங்கும் அமைப்புக்களால் அடிப்படைவாதம் போதிக்கப்படுகின்றது. தப்லீக், தெளஹீத், ஜமாத்தே இஸ்லாம், இஹ்வான் ஆகியவையே அந்த சிந்தனைகள். குறித்த சிந்தனைகளின் கீழ், அரச சார்பற்ற நிறுவங்களாக அல்லது சிவில் சமூக அமைப்புக்களாக இயங்கும் 43 அமைப்புக்கள் பிரதானமாக இந்த வேலையை முன்னெடுக்கின்றனர்.

தப்லீக் எனும் சிந்தனை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. தப்லீக் எனும் சொற்பதமானது இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதைக் குறிக்கும். இந்த சிந்தனையின் தோற்றுவிப்பாளர் இல்லியாஸ் என்பவர். இலங்கையில் தற்போது கிராண்பாஸ் பகுதியில் மர்கஸ் எனும் பெயரில் இதன் தலைமையகம் உள்ளது.

தலதா மாளிகைக்கு சொந்தமான இடத்தில் அமையப்பெற்றுள்ள கண்டி, மீரா மக்காம் பள்ளிவாசலை சம்பிரதாய முஸ்லிம்களான சூபி முஸ்லிம்களிடம் இருந்து இந்த தப்லீக் சிந்தனையாளர்களே கைப்பற்றியுள்ளார்கள். இலங்கையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்னிலையாகும் அகில இலங்கை ஜமீய்யதுல் உலமா சபையில் பெரும்பாலானவர்கள் இந்த தப்லீக் சிந்தனை கொண்டவர்கள். உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தப்லீக் சிந்தனையை பிரதிநிதித்துவம் செய்யும் உலமா சபையில் அங்கம் வகிக்கும் அவர்களின் முக்கிய தலைவர். சூபி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதில் இவர்களின் பங்கு முக்கியமானது. சம்பிரதாய முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தப்லீக் சிந்தனை அதிகமுள்ள, ஏனைய மூன்று சிந்தனைகளும் சேர்ந்துள்ள உலமா சபையால் தீர்வு கொடுக்க முடியாது. தப்லீக் சிந்தனைகளில் உருவான பயங்கரவாத அமைப்பே தலிபான் என்பது. இந்த சிந்தனையின் கீழ் இலங்கையில் சம்சம், நிதா போன்ற அரச சார்பற்ற அமைப்புக்கள் இயங்குகின்றன.

மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தின் பால் மதமாற்றம் செய்யும் நடவடிக்கை இச்சிந்தனையின் முக்கிய நடவடிக்கை. கடந்த 5 வருடங்களில் 18,000 பேர் இலங்கையில் முஸ்லிம்களாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் சமாதிகள், உருவச் சிலை போன்ற வணக்கங்கலை எதிர்க்கின்றனர். இவர்களைப் போன்றே ஏனைய தெளஹீத், ஜமாட்த்தே இஸ்லாமி, இஹ்வான் ஆகிய சிந்தனைகளும், இலங்கையின் சம்பிரதாய முஸ்லிம்கள் ஆதரித்த சமாதி வழிபாடு, உருவச் சிலை வழிபாடுகளை எதிர்ப்பதாக, தப்லீக் சிந்தனையுடன் ஒன்றினைந்ததாக உள்ளது. இந்த தப்லீக் சிந்தனையை பரப்ப அவர்கள், மஹலா, சிலா, வெள்ளி மர்க்கஸ் ஆகிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

கிங்க்ஸ்பரி ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்தவர் கூட தப்லீக் சிந்தனையைக் கொண்டவர். அதே போல் தெளஹீத் எனும் சிந்தனை சவூதி அரேபியாவில் அப்துல் வஹாப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அந்த சிந்தனையிலேயே அல்கைதா எனும் பயங்கரவாத அமைப்பு உருவாகியுள்ளது. தெளஹீத் என்றால் ஏகத்துவம் என்று அர்த்தம். அதாவது ஓரிறைக் கொள்கையை பின்பற்றுவது இலங்கையின் சம்பிரதாய முஸ்லிம்களான சூபி முஸ்லிம்கள் ஆதரிக்கும் தர்கா அதாவது சமாதி வணக்கங்கள் போன்றவற்றை தெளஹீத் சிந்தனையாளர்கள் உள்ளிட்ட அந்த 4 சிந்தனையாளர்களும் எதிர்க்கின்றனர். 2016 இல் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள, தற்போதைய சிலோன் தெளஹீத் ஜமாத்தின் செயலரும், முன்னாள் இலங்கை தெளஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளருமான அப்துல் ராசிக், 9 தெளஹீத் தலைவர்களும், 90 கிளைகளும் அவர்களுக்கு நாடு முழுதும் உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் 10 ஆயிரம் பேர் அவர்களின் உறுப்புரிமை பெற்ற உறுப்பினர்களும், உறுப்புரிமை பெறாமல் 50 ஆயிரம் பேர் வரையிலும் தெளஹீத் அமைப்புடன் உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த அப்துல் ராசிக் என்பவரும் சஹ்ரானும் சேர்ந்தே தெளஹீத் ஜமாத்தை ஆரம்பித்தனர். ஆனால் அப்துல் ராசிக் தற்போதும் சுதந்திரமாக வெளியே நட்மாடுகின்றார். தெளஹீத் சிந்தனையுடன் இலங்கையில் ஐ.ஐ.ஆர்.ஓ., ஐ.ஆர்.ஓ., வாமி உள்ளிட்ட பல சிவில் அமைப்புக்களும் தெளஹீத் ஜமாத் எனும் பெயர் தாங்கிய ஏ.டி.ஜே, சி.டி.ஜே., என்.டி.ஜே. போன்ற பல அமைப்புக்களும் செயற்படுகின்றன.

இவ்வாறான டி.ஜே. அதாவது தெளஹீத் ஜமாத் எனும் பெயருக்கு முன்னாள் வேறு ஒரு எழுத்தை சேர்த்த 6 அமைப்புக்கள் வரை உள்ளன. தெளஹீத் சிந்தனையில் இயங்கும் அமைப்புக்களில் முக்கியமாக, வாமி எனும் உலக முஸ்லிம் வாலிபர் சபை தொடர்பில் கூற வேண்டும். அதன் தலைமையகம் சவூதி – ரியாத் நகரில் உள்ளது. இலங்கையில் அந்த அமைப்பின் தலைவராக செயற்பட்டவர் ஓமான் இத்ரிஸ் சல்தாத் எனும் ஒரு சூடான் பிரஜை. விக்கி லீக்ஸின் தகவல்கள் படி அவர் ஒரு பயங்கரவாதி. அத்துடன் இந்த வாமி அமைப்பில் இலங்கையில் கல்வி விவகார பொறுப்பாளராக செயற்பட்டவர் இசாக். அவர் இலங்கையர். தற்போது அவர்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேச பயங்கர்வாத அமைப்பின் கல்வி அதிகாரியாக செயற்படுகின்றார்.

இந்த அமைப்பூடாக அவர், கல்வி நடவடிக்கை எனும் பெயரில் இளைஞர்களை பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்புச் செய்துள்ளார். இளைஞர்களுக்கு அடிப்படைவாதத்தை விதைத்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து முதலில் உயிரிழந்த நிலாம் எனும் கலேவல பகுதியைச் சேர்ந்த கராட்டி ஆசிரியரின் சகோதரரே இவர். அபூ ஹுரையா சைலானி எனும் பெயரில் நிலாம் சிரியாவில் ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

அவ்வாறு உயிரிழந்த நிலாமின் மச்சான்மார் இருவர் கூட ஐ.எஸ்.உடன் இணைந்து செயற்பட்டு சிரியாவில் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தெளஷிக். அவர் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் தொலைபேசி திணைக்களத்தில் சேவையாற்றியவர். மற்றையவர் தாஹிர்.

இதனைவிட சுஹைர் எனும் மருத்துவர் ஒருவர் கூட அந்த பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றார். இந்த தகவல்கள் உளவுத் துறைக்கும் தெரியும். அவர்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. 2014 ஆம் ஆண்டு நாம் அப்போது பாதுகாப்பு செயலராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனான பல்வேறு கலந்துரையாடல்களில் இந்த அடிப்படைவாதிகள் தொடர்பில் தகவல் அளித்துள்ளோம். அந்த கலந்துரையாடல்களில், அப்போதைய உளவுத் துறை பிரதானி ஹெந்தவிதாரன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாகிஷ்ட, சுரேஷ் சலே போன்ற உளவுத்துறையுடன் தொடர்புப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

அதே போல் மற்றொரு சிந்தனையான ஜமாத்தே இஸ்லாமி சிந்தனை பாகிஸ்தானில் மெளலூதி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு சிந்தனை. பாகிஸ்தானில் ஒரு கட்சியும் இதே பெயரில் உள்ளது. . பாகிஸ்தானில் இந்த சிந்தனைக் கொண்ட 24 ஆயிரம் மத்ரசாக்களை முன்னாள் ஜனாதிபதி பர்வீஸ் இழுத்து மூடியிருந்தார். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷில் இந்த சிந்தனை கொண்ட அமைப்பு தடைச் செய்யப்பட்டுள்ளது. எனினும் இலங்கையில் இவ்வமைப்பின் செயற்பாடு தொடர்கின்றன. இந்த ஜமாத்தே இஸ்லாமின் கீழ் தலபா எனும் இளைஞர் அமைப்பு உள்ளது. அவர்கள் நாடளாவிய ரீதியில் முகாம்களை நடாத்தி வருகின்றனர். அவ்வாறான முகாம்களில் பயிற்றப்பட்டவர்களே பிலிமத்தலாவையில் புத்தர் சிலையை உடைத்தனர். இந்த அமைப்பினர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த ஜமாத்தே இஸ்லாம் சிந்தனையின் கீழ், ஹிரா, செரண்டீப், ஓ.எம்.எஸ்.ஈ.டி. போன்ற அரச சார்பற்ற சிவில் அமைப்புக்கள் உள்ளன. ‘ என சாட்சியமளித்தார்.

ஏற்கனவே கடந்த சனிக்கிழமை சாட்சியமளிக்கும் போது இஹ்வான் சிந்தனை தொடர்பில் ஞானசார தேரர் சாட்சியமளித்திருந்த நிலையில், அதில் எகிப்தில் குறித்த சிந்தனை யூசுப் அல் கர்ளாவி என்பவரால் உதயமாக்கப்பட்டது என தெரிவித்திருந்துடன் அவரை இந்நாட்டில் மூவர் சந்தித்தமை தொடர்பிலும் புகைப்படம் ஒன்றினை சமர்ப்பித்து சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here