திருடப் போன இடத்தில் மீன்குழம்புடன் வயிறுமுட்ட சாப்பிட்டதால் குறட்டை விட்டு தூங்கிய திருடன்!

திருடப் போன இடத்தில் மீன்குழம்பு கறியுடன் வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு, அசதியில் தூக்கமிட்ட திருடன் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

வீட்டு மாடியில் குறட்டை சத்தம் கேட்டதையடுத்து, வீட்டு உரிமையாளர்கள் மாடிக்கு சென்றபோது திருடன் அசதியில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில், கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் கொள்ளை முயற்சிகள் நடந்துவந்தன. வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தும் நகை, பணம் எதுவும் கொள்ளை போகாமல் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அங்கு சென்று விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனைசெய்தனர்.

அதில், இளைஞர் ஒருவர் வீடுகளின் சுவர் ஏறிக் குதித்து, ஒவ்வொரு வீடாகச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளைவைத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் அதிகாலை, பரைக்கோடு பகுதியில் உள்ள ஆளில்லாத ஒரு வீட்டின் மொட்டை மாடியில் யாரோ குறட்டைவிட்டு தூங்கும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். பொதுமக்கள், திருடன் திருடன் என சத்தம்போட்டு கத்தினர். இதனால் தூங்கிக்கொண்டிருந்தவர் அரக்கப்பரக்க எழுந்து சுவர் ஏறிக் குதித்து தப்பியோடினார். பொதுமக்கள் அவரை துரத்திப் பிடித்தனர். பின்னர், தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தக்கலை போலீஸார் அங்கு சென்று இளைஞரிடம் விசாரணை நடத்தியபோது, ஏற்கெனவே சிசிடிவி காட்சியில் சிக்கிய திருடன்தான் அவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து, காவல் நிலையத்துக்கு அந்த இளைஞரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அவர் கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பதும், கேரளத்தில் பல இடங்களில் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.

கொள்ளையன் சதீஷ் போலீஸாரிடம், “கேரளத்தில் கொள்ளையில் ஈடுபட்டுவந்தேன். தற்போது, கொரோனா ஊரடங்கால் அங்கு கொள்ளையடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தை குறிவைத்து வந்தேன். பரைகோடு பகுதியில் பூட்டிக்கிடந்த இரண்டு வீடுகளில் பகல் நேரத்தில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றேன். அங்கு நகை, பணம் எதுவும் இல்லை. இதனால் மற்றொரு வீட்டுக்குச் சென்றேன்.

cctv காட்சி

அங்கு இருந்தவர்கள் என்னைக் கண்டதும் சத்தம் போட்டு பிடிக்க முயன்றனர். அப்போது எனக்கு கொரோனா நோய் இருப்பதாகக் கூறியதால் அவர்கள் அருகில் வரவில்லை. இதைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டேன். அன்று இரவு, மற்றொரு வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றேன். அங்கு எதுவும் கிடைக்காததால், அந்த வீட்டில் இருந்த சோறு மற்றும் மீன்குழம்பை தூக்கிக்கொண்டு பக்கத்து வீட்டு மொட்டைமாடிக்குச் சென்றேன். மொட்டைமாடியில் சாதத்தையும், மீன் குழம்பையும் வைத்துவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றேன்.

அங்கு ஆள்கள் இருந்ததால் கொள்ளையடிக்கும் முயற்சியைக் கைவிட்டு, மொட்டைமாடிக்குச் சென்று, மீன்குழம்பு சாதத்தை வயிறு முட்ட சாப்பிட்டேன். சாப்பிட்ட பிறகு அங்கேயே அயர்ந்து தூங்கிவிட்டேன். விடிந்த பிறகும் தூக்கம் கலையாததால் பொதுமக்களிடம் வசமாக சிக்கிக்கொண்டேன்” என்று அப்பாவியாகத் தெரிவித்தார்.

பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த சங்கர் மற்றும் பாக்கியம் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவுசெய்த போலீஸார், கொள்ளையன் சதீஷை சிறையில் அடைத்தனர். கைதுசெய்யப்பட்ட சதீஷ் மீது கேரளாவில் ஒரு கொலை மற்றும் பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here