கொரோனா நிதிக்கு அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தமைக்கு எதிராக வழக்கு!

கிழக்கு மாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் இலங்கை ஆசிரியர் சங்கம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயருபன் ஞாயிற்றுக்கிழமை (14) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கொவிட்19 நிதியத்திற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனுமதியின்றி சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பிடித்தமையானது அவர்களின் அடிப்படை உரிமை மீறும் செயலாகும் அதனை எதிர்த்து இலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த மே மாதம் சம்பளப் பட்டியலிலிருந்து கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தின் குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டிருப்பதோடு மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சுகாதார விதி முறைகளுக்கு முரணாக சில வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அறிவுறுத்தலுக்கமைய திறக்கப்பட்டு விருப்பமின்றி அனுமதி பெறப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் 2020.06.12 அன்று எஸ்.சி.எப்.ஆர்.166ஃ220 இலக்கத்தில் அடிப்படை உரிமை வழக்கொன்றை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், மாகாண கல்விச் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பொர்ணாண்டோ, பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயருபன் ஆகியோர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here