தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் இணையுங்கள்; வாலிபர் முன்னணி கோரிக்கை: மாவை வெலவெலப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை இணையுங்கள் என தமிழ் அரசு கட்சி தலைமையிடமும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் தமிழ் அரசு கட்சியின் வாலிபர் அணி வலியுறுத்தியது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வாலிபர் முன்னணிக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களிற்குமிடையிலான சந்திப்பு இன்று (13) மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

வாலிபர் முன்னணியை சேர்ந்த சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

இதன்போது, வாலிபர் முன்னணி சார்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, விடுதலைப் புலிகள் பற்றிய விமர்சனங்களை வேட்பாளர்கள் தெரிவித்தால் தம்மால் பொதுமக்களிடம் செல்ல முடியாது, தற்போதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதால் தம்மால் மக்களி்டம் செல்ல முடியாமலுள்ளதாக இளைஞர் அணி கூட்டாக தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள், பிரபாகரனின் பெயரை உச்சரிக்காமல் நாம் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. அந்த பெயர்களையும் பாவித்தே வெற்றிபெற்றோம். அதனால் அந்த பெயர்களை அவமரியாதை செய்யக்கூடாது என்றனர்.

இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா, “நாம் போராட்டத்தை மதிக்கிறோம். அது பற்றி நாம் பொறுப்புடன் பேசுவோம்“ என்றார்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞஞாபனத்தில் இணைக்க வேண்டுமென்றும் வாலிபர் முன்னணியினர் கேட்டுக் கொண்டனர்.

இந்த கோரிக்கையை கேட்டு மாவை சேனாதிராசா வெலவெலத்து போனார். “தம்பியவை பார்ப்போம்… அதைப்பற்றி யோசிப்போம்“ என மழுப்பலாக பதிலளித்தார்.

“வட்டுக்கோட்டை தீர்மானத்தை விஞ்ஞாபனத்தில் இணைக்க வேண்டுமென்றால், மீண்டும் ஆயுதப் போராட்டத்தை விரும்புகிறீர்களா?“ என எம்.ஏ.சுமந்திரன் இளைஞர்களிடம் பதில் கேள்வி கேட்டார்.

போராட்ட வழிமுறையை நாம் குறிப்பிடவில்லை, இலக்கையே குறிப்பிட்டோம் என வாலிபர் முன்னணியினர் குறிப்பிட்டனர். வாலிபர் முன்னணியின் சில உறுப்பினர்கள் அந்த கருத்தை எதிர்த்தனர்.

“இதைப்பற்றி நாம் ஆராயலாம்“ என குறிப்பிட்டு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியிட்டார் மாவை சேனாதிராசா.

கிளிநொச்சி மாவட்டத்தில் கேடயம் சின்னத்தை உரிமை கோரி களமிறங்கிய சுயேட்சைக்குழு தன்னால் இறக்கப்பட்டதாக, கிளிநொச்சியின் முன்னாள் எம்.பி சிறிதரன் தெரிவித்தார். எனினும் அந்த சுயேட்சைக்குழு தேர்தலில் செயற்படாது என்றார். அத்துடன், ஆறுமுகன் தொண்டமானால் களமிறக்கப்பட்ட சுயேட்சைக்குழுவும் செயற்படாது என்றார்.

இம்முறை சக்கர வியூகம் அமைக்க வேண்டுமென தெரிவித்த ஈ.சரவணபவன், தென்னிலங்கை கட்சிகளிற்கு மக்கள் வாக்களிக்ககூடாது என்பதே கூட்டமைப்பின் சக்கர வியூகமாக இருக்க வேண்டுமென்றார்.

அரசியல் தீர்வுடன், அபிவிருத்தி, மக்களின் பொருளாதார மீட்சியை இலக்கு வைத்து எதிர்வரும் காலத்தில் செயற்பட வேண்டும், அதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here