கொரோனா அதிகம் தாக்கும் வாய்ப்பு: O,A இரத்த வகையினருக்கு எச்சரிக்கை

கொரோனா நோய்த் தொற்று சிலரைப் பெரியளவில் பாதிக்கிறது, சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்துகிறது. சிலரை அவ்வளவாகப் பாதிப்பதில்லை, அறிகுறிகள்கூட தெரிவதில்லை – ஏன்?

ஒருவருக்கு கொரோனா தொற்றுவதிலும் பாதிப்பதிலும் அவருடைய இரத்த வகைக்குப் பெரும் பங்கிருப்பதாக அண்மையில் வெளியான சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

23அன்ட்மீ என்ற அமைப்பு ஏராளமான தரவுகளைச் சேகரித்து மேற்கொண்ட ஆய்வில், மற்ற வகையினரைவிட “ஓ” ரத்த வகை கொண்டவர்களை கொரோனா தொற்றுவது குறைவாக-, சுமார் 9 முதல் 18 சதவிகிதம் வரை, இருக்கிறது என்று அறியப்பட்டுள்ளது.

சுமார் 7.5 இலட்சம் பேரிடமிருந்து திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கொரோனா பரவலில் மரபுவழிக் காரணங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி ஆராயப்பட்டதில் இரத்த வகைக்கும் பங்கிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், ஏ இரத்த வகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிக்கிறது என்பதுடன் அவர்களுக்குக் கூடுதலான சிக்கல்களையும் ஏற்படுத்தி விடுகிறது.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், ஏ அல்லாத இரத்த வகையினரைவிட ஏ இரத்த வகையினர் (ஏ பொசிட்டிவ், ஏ நெகட்டிவ், ஏபி பொசிட்டிவ், ஏபி நெகட்டிவ்) கூடுதலாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

தவிர, ஓ இரத்த வகையினர் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியிலும் ஸ்பெயினிலும் மேற்கொண்ட ஆய்வுகளும்கூட ஏறத்தாழ இதே முடிவுக்கே வந்திருக்கின்றன.

ஏ இரத்த வகையினர் கூடுதலான அளவில் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் ஓ வகையினர் குறைவாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

இத்தாலியிலும் ஸ்பெயினிலும் சுவாசப் பிரச்னையில் சிக்கிய சுமார் 1,600 கொரோனா நோய்த் தொற்று நோயாளிகளின் மரபணுக்களைப் பரிசோதித்ததில் மற்றவர்களைவிட ஏ இரத்த வகையினருக்கான பாதிப்பு 50 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.

அமெரிக்காவில் நியுயோர்க் மருத்துவமனையொன்றில் நடத்திய ஆய்வொன்றும் ஏறத்தாழ இதேபோன்ற முடிவுக்கே வந்திருக்கிறது.

எனினும், இவையே முடிவான ஒன்றல்ல என்பது குறிப்பிடத் தக்கது. நோய் தொற்றுவதிலும் பாதிப்பதிலும் இரத்த வகை எந்த வகையிலான செயல்பாட்டை நிகழ்த்துகிறது என்பது பற்றி இன்னமும் தெளிவாக எதுவும் தெரிய வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here