அக்கராயன் வைத்தியசாலை மூடப்படுகிறது!

கிளிநொச்சி நகரிலிருந்து 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மூடப்பட்டு ஒரு மாதத்திற்குள் கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது.

இது குறித்த தீர்மானம் நேற்று 11-06-2020 அன்று கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் அக்கராயன்குளம் வைத்தியசாலையினை கொரோனா வைத்தியசாலையாக மாற்றியமைக்கும் பொறுப்பு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை காலமும் அக்கராயன் வைத்தியசாலையில் இடம்பெற்று வந்து அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுவதோடு, வெளிநோயாளர் பிரிவு சேவை மாத்திரம் ஸ்கந்தபுரம் பொது நோக்கு மண்டபத்தில் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

‘எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற ஒரு பொதுநோக்கு மண்டபத்தில் சாதாரன சிகிச்சைகளை மாத்திரமே வழங்க முடியும் எனவும் அதுவும் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு அடிப்படை வசதிகளற்ற ஒரு கட்டடத்தில் சேவையினை வழங்கூடியதாக இருக்கும் என தங்களால் உறுதியாக கூற முடியாதுள்ளது’ என்றும் அக்கராயன் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘கொரனா நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளி இருக்கும்வரை அக்கராயன்குளம் வைத்தியசாலை கொரனா வைத்தியசாலையாக இயங்கும் என்பதால் அடுத்துவரும் பல மாதங்களுக்கோ சில வருடங்களுக்கோ இவ் வைத்தியசாலை பொதுமக்களுக்கான வழக்கமான மருத்துவ சேவைகளை வழங்கமுடியாது போகும்’ என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு ‘வன்னேரிக்குளம், முட்கொம்பன், கோட்டைகட்டி உள்ளிட்ட போக்குவரத்து நெருக்கடிகள் மிக்க இடங்களில் இருந்து பொது மக்கள் இனிவரும் காலங்களில் அனைத்து சிகிச்சைகளுக்கும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கே செல்ல நேரிட்டுள்ளது’ என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர் பதலளிக்கவில்லை.எனவே இவ்விடயம் தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது.

மத்திய அரசின் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்பிற்கு அமைய அக்கராயன் மருத்துவமனை மாவட்டத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது. இதுவொரு தற்காலிக ஏற்பாடு, எனவே இது தொடர்பான தீர்மானம் மதாவட்டத்தில் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துபேசியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு பிரதேச மக்கள் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்த விடயம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் அக்கராயனில் இடம்பெறவுள்ளது. எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here