வெளிநாடு செல்லும் தமிழ் இளைஞர்கள் கைதில் சம்பாதித்த தமிழ் சட்டத்தரணி… நாடாளுமன்றத்தில் கண்டித்த சம்பந்தன்!


தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் தேர்தலையொட்டி எழுந்த குடுமிப்பிடி சண்டைகள் இப்பொழுது ஓரளவு ஓய்ந்து, அவரவர் தேர்தல் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர். முன்னரைப் போல பொதுக்கூட்டங்கள் வைக்காமல், சிறிய “பொக்கற் மீற்றிங்“ மற்றும் வீடுகளில் சந்திப்பு நடத்தப்படுவதால், ஆளையாள் குறுக்கிடாமல்- மல்லுக்கட்டாமல்- பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேட்பாளர் நியமனம், அதன் பின்னர் எழுந்த மோதல் போக்கு தற்போது இல்லை. ஓரளவுக்கு ஓய்ந்து விட்டது.

இனி தேசியப்பட்டியல் நியமனத்தின் போதுதான் மீண்டும் மோதல் ஆரம்பிக்கும்.

தேசியப் பட்டியல் நியமனத்தின்போது, தத்தமது தரப்பினரிற்காக அணிகளாக மல்லுக்கட்ட ஆரம்பிப்பார்கள்.

தமிழ் அரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நியமனத்தில் முதலிடத்தில் திருகோணமலையை சேர்ந்த கனடா இறக்குமதி குகதாசன் இருக்கிறார். அடுத்ததாக அம்பிகா இருக்கிறார்.

இதேவேளை, தமிழ் அரசு கட்சி கொழும்புக்கிளை தலைவர் கே.வி.தவராசாவை ஒரு தரப்பினர் ஆதரிக்கிறார்கள். ஆனால், கே.வி.தவராசாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட வாய்ப்பில்லையென்றே தெரிகிறது. காரணம்- இரா.சம்பந்தனும் அதை விரும்பவில்லை.

எம்.ஏ.சுமந்திரன்தான் குறுக்கே நிற்கிறார் என தவராசா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். தவராசாவும் அப்படித்தான் கருதுகிறார்.

கே.வி.தவராசாசவிற்கு ஏன் தேசியப்பட்டியல் வழங்கப்படாது என்பதை கட்சித் தலைமை தனது உறுப்பினர்களிற்காவது, புரிய வைக்குமென நம்புகிறோம். அதை செய்தால், சர்ச்சை குறையலாம்.

இப்பொழுது நாம் வேறொரு விவகாரத்தை குறிப்பிடுகிறோம். இதற்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கும் தொடர்பிருப்பதாக யாரும் கருதினால், அதற்கு நாம் பொறுப்பல்ல. சட்டத்தரணிகள் விவகாரமென்பதால் இந்த இடத்தில் அதை குறிப்பிடுகிறோம்.

1995ஆம் ஆண்டு காலப்பகுதி. கொஞ்சம் முன்னர் பின்னராகவும் இருக்கலாம். இரா.சம்பந்தன் ஒருமுறை நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது- “கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதுடன் தமிழ் தம்பதியான சட்டத்தரணிகளும் தொடர்புபடுவதாக அறிகிறோம். இளைஞர்கள் கைது செய்யப்படுவதுடன் பின்னணியில் பணம் பறிக்கும் வலைப்பின்னல் உள்ளது. அதில் தமிழ் தம்பதியினரான சட்டத்தரணிகள் தொடர்புபட்டதாக செய்திகள் வருகின்றன. இது அநாகரிகமானது“ என உரையாற்றினார். நாடாளுமன்ற ஹன்சார்ட் புத்தகத்தில் இன்றும் அது உள்ளது.

1993,94,95 காலப்பகுதிகளில் வெளியான சரிநிகர் இதழ்களில் பெயர் குறிப்பிடாமல் சில சட்டத்தரணிகள் பற்றி தொடராக செய்திகள் வெளியாகியிருந்தன.

வடக்கு, கிழக்கிலிருந்து வெளிநாடு செல்வதற்காக கொழும்பு செல்லும் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டு, பணம் பறிக்கப்படுவது பற்றி அதில் விலாவாரியாக எழுதப்பட்டிருந்தது.

அப்போது வெளிநாட்டுக்கு சென்றவர்களிற்கு, இந்த விடயங்கள் நினைவிருக்கும்.

இளவயதில் பெற்றோரால் அல்லது தெரிந்தவர்கள் மூலம் இளையவர்கள் கொழும்பிற்கு அழைத்து வரப்படுவார்கள். ஆள்த்துணையற்றவர்கள் வந்து ஏஜென்ஸியை நம்பி தனித்து விடுதிகளில் தங்கியிருப்பார்கள். வெளிநாட்டு பயணம் சிலபல மாதங்கள் இழுபட்டே சாத்தியமாகும். இந்தகாலப்பகுதியில் ஏஜென்ஸிகாரருடன் பேசி, அவரது பொறுப்பில் ஏதாவது லொட்ஜில் பிள்ளைகளை விட்டுவிட்டு பெற்றோர் வீடு திரும்பவார்கள்.

கொழும்பு செல்லும் பலருக்கு வங்கிக்கணக்கு இருக்காது. தங்கியிருக்கும் லொட்ஜ் உரிமையாளரின் வங்கிக்கணக்கிலேயே, அந்த நபருக்கு வெளிநாட்டிலிருக்கும் உறவினர் பணம் அனுப்புவார். அப்படி பணம் வந்த அன்று அல்லது அடுத்தடுத்த நாட்களில் விடுதி சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகத்தில் சிலர் கைதாவர்.

கைதானவரின் உறவினர்களிடம் சில சட்டத்தரணிகளின் விசிற்றிங் கார்ட்டை விடுதி உரிமையாளரே கொடுப்பார். அவர்தான் பொலிசுடன் நெருக்கமான சட்டத்தரணி, அவரை தொடர்பு கொள்ளுங்கள் என சொல்வார்கள். இதில் சில பச்சை உடுப்புக்காரரும் தொடர்புபட்டிருப்பார்கள். விடுதி உரிமையாளருக்கும் சட்டத்தரணி பாகப்பிரிவினை கொடுப்பார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் இலக்கு வைக்கப்படுவார்கள். இதற்கு சுளையான எமவுண்ட்!

இப்படியான தமிழ் சட்டத்தரணி தம்பதியொன்றையே இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார்.

ஒரு கூடுதல் தகவல்- அந்த சட்டத்தரணி இப்பொழுது தமிழ் தேசிய கட்சியொன்றின் பிரமுகர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here