மட்டக்களப்பு வேட்பாளர்கள் வெற்றிபெற்ற பின்னர் கட்சி மாற மாட்டார்கள் என உத்தரவாதம் தர முடியாது; தமிழ் அரசு கட்சி செயலாளர் அதிர்ச்சி பதில்!

“2010இல் அம்பாறையில் பியசேனா, 2015இல் மட்டக்களப்பில் வியாழேந்திரன் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகி பின்னர் அரச பக்கம் தாவியதை போல், 2020 பொதுத் தேர்தலில் தமிழ் தேசியகூட்டமைப்பில் இருந்து எம். பியாகிய பின்னர் யார் கட்சி தாவவுள்ளனர் என மட்டக்களப்பில் பலர் கேட்கிறார்கள். தற்போது மட்டக்களப்பில் புதிதாக தமிழரசு கட்சியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்கள் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது“ என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி வாலிபர் அணி கூட்டத்தில் ஒரு இளைஞர் தமிழரசு கட்சி பொதுச்செயலாளரிடம் கேள்வி கேட்டார்.

இந்த சுவாரஸ்ய சம்பவம் நேற்று முன்தினம் (10) மட்டக்களப்பு தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கும் தமிழரசு கட்சி வாலிபர் அணி உறுப்பினர்களுக்கும் இடையில் தேர்தல் பிரசாரம் சம்பந்தமான கூட்டம் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றபோது இந்த கேள்வியெழுப்பப்பட்டது.

இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசு கட்சி வாலிபர் அணி உறுப்பினர் ஒருவர், “தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும் இடமெல்லாம் உங்கள் கட்சியில் இருந்து புதிதாக வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஒருவர் (சாணக்கியனை பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டினார்) வெற்றி பெற்றுவிட்டு அரசாங்கத்தில் சேருவதாக சந்தேகம் பலமாக உள்ளது. எனவே ஒரு உடன்படிக்கை ஒன்று செய்ய வேண்டும். வெற்றிபெற்ற பின்னர் அரசு பக்கம் தாவமாட்டோம் என முத்திரையிட்டு கையொப்பம் வாங்கி எடுத்தால் நல்லது. அதை மக்களிடம் காட்டி, அப்படி எவரும் மாறமாட்டார்கள் என பிரசாரம் செய்யலாம்“ என அந்த இளைஞன் ஆலோசனை கூறினான்.

பட்டிருப்பு வேட்பாளர் சாணாக்கிய ராகூல ராஜபுத்திரனின் சிங்கள பின்னணி மற்றும் மஹிந்த தரப்புடன் தற்போதுமுள்ள உறவு ஆகியவற்றின் அடிப்படையில், அவர் தொடர்பில் கட்சிக்குள்ளேயே கணிசமான சந்தேகம் எழுந்துள்ளது. கட்சியின் பிரமுகர்கள் சிலருக்கு அவர் தேர்தல் பிரச்சார நிதியளித்து, வேட்பாளர் ஆசனத்தை பெற்றதாக தகவல் வெளியான நிலையில், இளைஞர் இந்த கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பொதுச்செயலாளர் கி.துரைரராசசிங்கம், அப்படியான நடைமுறைகள் எமது கட்சியில் இல்லை என்று மழுப்பல் பதில் வழங்கினார்.

மேலும் ஒரு இளைஞன், இனிமேல் வேறு கட்சிகளில் இருந்து நமது கட்சியில் வருபவர்களுக்கு உடனடியாக வேட்பாளர் நியமனம் வழங்குவது முட்டாள்த்தனம் என கூறினார்.

பொதுச்செயலாளர் அதற்கு, மாற்றுக்கட்சியில் இருந்து வருபவர்களையும் நாம் அணைக்கும் பக்குவம் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சியை வளர்க்கலாம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here