மஹிந்தவிற்கு 5,000 ரூபா கொடுத்த 86 வயது முதியவர்!

பொலன்னறுவை மாவட்டம் மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் நோயுற்றிருக்கும் நிலையிலும் கொரோனா நிதியத்துக்கு 5,000 ரூபாவை வழங்கியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு என எழுதப்பட்ட கடிதமொன்று அலரி மாளிகைக்கு கிடைத்த நிலையில் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் அக்கடிதத்தை பிரதமரின் நேரடிப் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளனர்.

மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராமச் சங்க உறுப்பினரான எஸ். பீ. ஹேவாஹெட்ட என்ற 86 வயது வயோதிபரே இக்கடிதத்தை எழுதி அதனுடன் 5 ஆயிரம் ரூபா பண நோட்டையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

தான் இப்போது 86 வயதைக் கடந்த நிலையில் நோயுற்றிருக்கின்றேன். நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையிலும் மக்களை வாழ வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளையிட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன். எவ்வாறான போதும் கொரோனா நிதியத்துக்கு நானும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் இத்துடன் இணைத்திருக்கும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான பண நோட்டை கொரோனா நிதியத்தில் சேர்த்து என்னையும் அந்தப் புண்ணிய கருமத்தின் பங்காளியாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நீங்கள் எனக்கு செய்த உதவிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த முதியவர் அனுப்பிய பண நோட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரைக் கொண்டே ஒப்படைக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உடனடியாக பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தை அழைத்து ஜனாதிபதியின் பிறந்த தினத்தன்று ஹேவாஹெட்டவுக்கு அழைப்பு விடுத்து அவரது கைகளால் அந்த பணத்தை கொரோனா நிதியத்துக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here