1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு… பிரபாகரனிற்கு ஜாமீன் கிடைத்தது யாரால்?: 38 வருடங்களின் பின் வெளியான வரலாற்று தகவல்!

1982ஆம் ஆண்டு சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது நடந்த விவரங்களை மூத்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் விளக்கி இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. நேற்று காலமான தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்தான் பிணை வாங்கி கொடுத்ததாக, இயக்குனர் அமீர் பிழையான தகவல. ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, அப்போது பிரபாகரனுடன் தங்கியிருந்த மூத்த சமூக செயற்பாட்டாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் 1982இல் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளதாவது,

ட்விட்டர் எனப்படும் சமூக ஊடகத்தில் கண்டதாக நண்பர் ஒருவர் ஓரு படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். மிகவும் ரசித்தேன், மகிழ்ச்சி அடைந்தேன். வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகின்றது என்பதற்கு கண்முன் காணப்படும் உதாரணமாக கொள்க. அந்த சம்பவத்தை பற்றி முழுதும் அறிந்த பலரும் இன்றும் அரசியலில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். நினைவில் உள்ளதை பகிர விரும்புகின்றேன்.

கவனிக்க. பிரபாகரன், முகுந்தன் (உமா மகேஸ்வரன்) உள்ளிட்ட பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம் 19-05-1982 அன்று நடந்தது. கடந்த 19.05.1982 அன்று ‘தொட்டால் சுடும்’ என்ற திரைப்படத்தை தி.நகர் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்து விட்டு அங்குள்ள செலக்ட் ஓட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு பாண்டி பஜாரில் நடந்து செல்லும் போது கீதா கபே முன்பு முகுந்தனும் பிரபாகரனும் இரவு 9.30 மணியளவில் சுட்டுக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தில் பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஓடி வந்தார்கள்.

கரிகாலன் என்ற பிரபாகரன், ரவீந்திரன் மற்றவர்களையும் பிடித்து பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் தப்பித்து ஓடி விட்டார். அவரை இரண்டு நாள் கழித்து கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள்.

அப்போது அந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நந்தகுமார் என்ற துணை ஆய்வாளர், பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கியை கையகப்படுத்தினார். ஜோதீஸ்வரன் என்ற கண்ணனும் கைது செய்யப்பட்டார். அங்கு தலைமை காவலர் எஸ். ரெங்கசாமி எண்: HC 3425 இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார். இதெல்லாம் நினைவுகள்.

இந்த வழக்கில் பழ. நெடுமாறன், பிரபாகரன், எனது வாக்குமூலம், முகுந்தன் வாக்குமூலம், இரவீந்திரன் வாக்குமூலம், ஜோதீஸ்வரன் வாக்குமூலம் மற்றும் தெருவில் நடந்துச் சென்ற சிலரின் வாக்குமூலம் மட்டுமே காவல் துறையால் பெறப்பட்டது.

தலைமை காவலர் எஸ். ரெங்கசாமி எண்: HC 3425 இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார். 20, 21 – 05-1982 ஆகிய இருநாட்கள் காவல்துறை மந்தவெளி Admiralty hotel இல் விசாரணை நடைபெற்றது. பின் இது சிபிசிஐடி க்கு மாற்றி கண்காணிப்பாளர் வெள்ளியங்கிரி தலைமையில் புலன் விசாரணை நடந்தது.

அதற்கு அடுத்த நாள் நானும் பிராபாகரன் தங்கியிருந்த சாலைத்தெரு வீட்டில் 22-05-1982 அன்று டி.ஐ.ஜி மோகன்தாஸ் தலைமையில் ரெய்டு நடத்தப்பட்டது. நான் வழக்கு நடத்தும் ஆவணங்கள், எனது உடமைகளை மற்றும் பிரபாகரனின் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

பிரபாகரனை 23-05-1982 அன்று சென்னை மத்திய சிறையில் சந்தித்தேன். அடுத்த நாள் நெடுமாறன் அவர்களுடன் சென்று சந்தித்தேன். 24-07-1982 அன்று வை.கோ அவர்களை அழைத்து சென்று பிரபகரனை சந்தித்தேன். 05-08-1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை ஆணை கோரி மனுவை தாக்கல் செய்தேன். அடுத்தநாள் 6-8-1982 நிபந்தனையின் பேரின் பிணை ஆணை கிடைக்கப்பெற்றேன். மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமலையும் நானும் ஆஜர் ஆனோம். நிபந்தனையின் படி பிரபாகரன் மதுரையிலும், முகுந்தன் சென்னையிலும் தங்கி காவல்நிலையத்தில் கையொப்பமிட வேண்டும்.

நெடுமாறன் பிரபாகரனை அழைத்துக் கொண்டு மதுரை சென்றார். மதுரை, மேலவாசி வீதி, விவேகானந்த அச்சகத்திற்கு எதிரே உள்ள தனது பழைய வீட்டில் தங்க வைத்தார் நெடுமாறன். அந்த வீட்டிற்கு அருகில் தான் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி காசிம் வீடும் இருந்தது. இவையாவும் தமிழீழ அரசியல் புரிதல் உள்ள பலருக்கும் தெரியும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 9 எம்.எல்.ஏ.க்கள் மரணம்… திமுகவில் 5 பேர்… அதிமுகவில் 4 பேர் இந்த வழக்குக்கு பாடுப்பட்ட நெடுமாறன், மற்றும் வை.கோ, மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமலை, எனது ஜூனியரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமானகே.எம்.பாஷா, எனது சீனியர் மாநில வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.காந்தி ஆகியோர் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார்கள். உயிருடன் இல்லாதவர்களை சாட்சியாக குறிப்பிட விரும்பவில்லை. பாண்டிபஜார் காவல்நிலையத்தின்அன்றைய மூத்த காவலர் எஸ்.ரங்கசாமி (HC3425) ஆகியோரிடம் வழக்கின் போக்கை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். இன்றைக்கும் இந்த ஆவணங்களை வழக்குமன்றத்தில் பார்க்கலாம். SC No.8/1983 on the file of 7th Additional Court ,High Court வளாகத்தில் பார்க்கலாம்.

வரலாறுகளை திரித்து சொல்வதால் இவர்களுக்கு என்ன இலாபம் என அறியேன். அதே சமயத்தில் உண்மையை வெளிக்காட்ட வேண்டிய நிலையும் வரலாறு திரிக்கப்படாமல் காக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கின்ற காரணத்தால் இதனை எல்லாம் பதிவு செய்கின்றேன். இத்துடன் காவல்நிலையத்தில் தட்டச்சு செய்யப்பட்ட சிறுபகுதியையும் இணைக்கின்றேன். ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றது. தேவைப்பட்டோர் வந்து பார்த்துக் கொள்ளலாம். இது தான் நடந்தது இது தான் உண்மை. வரலாறு. இதற்கு மேலும் மாற்றிப் பேசினால் என்ன சொல்ல முடியும். இது குறித்தான ஆவணங்களோடு என்னுடைய நினைவுகள் சுவடுகள் என்ற நூலில் விரைவில் வெளிவர இருக்கின்றது. அவ்வளவுதான்.

இது குறித்த பழைய எனது பதிவுகள்: http://ksradhakrishnan.in/?p=2776 http://ksradhakrishnan.in/?p=2770 நீதிமன்றத்தின் உத்தரவுகளை பொதுவெளியில் மாற்றிப் பேசுவதும் சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும். யார்மீதும் உள்ள மரியாதையை குறைக்கவோ, காயப்படுத்தவோ இப்பதிவை செய்யவில்லை. நான் சம்மந்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி திரித்து பேசப்படும் போது அமைதியாக இருக்க இயலாது அல்லவா? இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here