ஒரு மாதத்தில் அக்கராயன் வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற தீர்மானம்: மத்திய அரசின் தலையீடு?

கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை ஒரு மாதத்திற்குள் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றும் முடிவை வடக்கு சுகாதார அதிகாரிகள் இன்று எடுத்தனர். வடக்கில் வேறு பொருத்தமான வைத்தியசாலைகள் உள்ளன என்பதை பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியதை புறமொதுக்கி, பெருமளவு மக்களின் பாவனையிலுள்ள அக்கராயன் பிரதேசவைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக மாற்றமடைகிறது.

இன்று (11) கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவின் பின்னால், மத்திய அரசின் நிர்ப்பந்தம் இருப்பதை அறிய முடிகிறது. சுகாதாரத்துறையில் மாகாண நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு நிகழ்வது தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில்,  ஒரு மாதத்திற்குள் அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை, கொரோனா வைத்தியசாலையாக மாற்றும்படி, கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளருக்கு, வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இனிமேல் அக்கராயன் பிரதேச மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக மிக நீண்டதூரம் பிரயாணித்து, கிளிநொச்சிக்கே செல்ல வேண்டும். அதேவேளை, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஸ்கந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் இயங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம், அக்கராயன் பிரதேச வைத்தியசாலை ஸ்கந்தபுரம் பகுதிக்கு நகரும்.

வடக்கில் ஆட்தொகை குறைந்த பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளை கொரோனா வைத்தியசாலையாக மாற்றும்படி பல தரப்பினரும் குறிப்பிட்டு வந்தனர். அக்கராயன் பிரதேசத்தில் பெருமளவு மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இனி நீண்ட பிரயாணம் மேற்கொண்டே வைத்திய சிகிச்சை பெற வேண்டும். மழைக்காலத்தில் வெள்ளம் பெருகும் பிரதேசம் இது. இந்த பகுதியில் வைத்தியசாலை அமைப்பதால், கொரோனா கிருமி பரவும் அபாயமுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அது தவிர, அக்கராயன் வைத்தியசாலைக்கு செல்ல சீரான பாதையில்லை. மழைக்காலத்தில் வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் நீரில் மூழ்கி விடும். இவ்வளவு எதிர்மறை அம்சங்களிருந்தும், அக்கராயனை கொரோனா வைத்தியசாலையாக்கியது, “வைத்தியத்துறைக்குள் உள்ள அரசியல்“ என வைத்தியத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்ததை, ஏற்கனவே தமிழ்பக்கம் குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை, அக்கராயன் வைத்தியசாலையை கொரொனா வைத்தியசாலையாக மாற்றும் முடிவில் இருந்த வடக்கு சுகாதார திணைக்களம், பின்னர் அதிலிருந்து பின்வாங்க ஆரம்பித்தபோது, கிளிநொச்சியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், மத்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் இது குறித்து பேசியதாக வைத்தியத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்னர், சுகாதாரத்துறை உயரதிகாரியொருவர் வடக்கு நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, அக்கராயனை கொரொனா வைத்தியசாலையாக மாற்றும்படி அறிவுறுத்தியதாக அறிய முடிகிறது.

இதையும் படியுங்கள்- அக்கராயன்குளம் கொரோனா வைத்தியசாலை யாருக்கான தெரிவு? (exclusive)

இதன் பின்னரே, அக்கராயன் வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக மாற்றமடைகிறது.

ஏற்கனவே, வடக்கு சுகாதாரத்துறையில் மத்திய அரசின் தலையீடு குறித்த விமர்சனமிருந்தது. வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமித்தது, மாகாண அதிகாரங்களை மீறும் செயலென பல தரப்பினாலும் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இதேவிதமாக, மத்திய சுகாதாரத்துறையின் தலையீட்டுடன் அக்கராயன் வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக மாற்றமடைகிறது.

அக்கராயன் வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதென ஒற்றைக்காலில் நின்ற கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர், ஒரு மாதத்தில் அக்கராயன் வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதாக இன்றைய கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்- அக்கராயன்குளம் கொரோனா வைத்தியசாலை யாருக்கான தெரிவு?-2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here