கொரோனாவால் தமிழக எம்.எல்.ஏ ஜெ.அன்பழன் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் 62 வயதில் காலமானார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ இவர் ஆவார்.

எம்.எல்.ஏ அன்பழகன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடந்த 2ம் தேதி, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருக்கு வென்டிலேட்டர் வாயிலாக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலையில் மிகவும் மோசமடைந்தது. தொடர்ந்து இன்று (10) காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் காலமானார். அவரது உடல், கண்ணமாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. 1958 ம் ஆண்டு ஜூன் 10 அன்று பிறந்தவர். பிறந்த நாள் அன்றே அவர் காலமானார்.

பி.ஏ, பொருளாதாரம் படித்துள்ள அவர், கடந்த 2001 ல் முதன்முறையாக சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெ.அன்பழகன் இறந்த செய்தி இதயத்தில் மின்னலும், இடியும் ஒரு சேர இறங்கியது போல் உள்ளது. உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை அயராது பாடுபட்டார். அன்பழகன் மறைந்துவிட்டார் என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. அவரது மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் 3 நாட்கள் திமுக கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும். திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here