மட்டக்களப்பில் 5,000 ரூபா கொடுப்பனவில் குழறுபடியா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா Covid 19 வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரன நிலையில் வாழ்வாதார வழிகளை இழந்த மக்களுக்கு அரசாங்கத்தால் சமுர்த்தி வங்கிகள் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் ரூபா 5000 கொடுப்பனவு கடந்த மார்ச் மாதம் 25ம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு தற்போதுவரை 1ம் கட்டம், 2ம் கட்டம் என்ற ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி நிவாரணம் பெறும் சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவினை எதிர்பார்த்து உள்ள மக்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த மக்கள் என ரூபா 5000 கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பிரதேச செயலகப் பிரிவுகளில் குறித்த கொடுப்பனவு வகையில் முறைகேடுகள் நேரடியாக இடம் பெற்றுள்ளது.

அத்துடன் 1ம் கட்டக் கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் 30 திகதிக்கு முன்னர் உரிய மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டதாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் அந்த அறிக்கைகளுக்கு அமைவாக இன்னும் சில பிரதேச செயலகப் பிரிவுகளில் உரிய மக்களின் கைகளில் குறித்த பணம் முழுமையாக சென்றடையாத நிலை காணப்படுவதுடன் பொது மக்களால் முன் வைக்கப்படும் முறைப்பாடுகள் கூட பிரதேச செயலாளர்களால் உரிய முறையில் கவனத்தில் கொள்ளாது செயற்பட்டும் வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு வருடமாக சமுர்த்தி பயனாளிகளாக நிவாரணம் பெறும் 106500 வரையான குடும்பங்கள் என கணக்கில் உள்ள நிலையில், தற்போது கொரோனா Covid 19 ரூபா 5000 கொடுப்பனவின் 2ம் கட்டக் கொடுப்பனவு வழங்கப்படும் போது பிரதேச செயலக ரீதியாக குறைக்கப்பட்ட கணக்குகள் காட்டப்பட்டு வருவதாகவும் சில பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 1ம் கட்டக் கொடுப்பனவினை முழுமையாக செலுத்தியதாக அறிக்கை காட்டியவர்கள்.

இரண்டாம் கட்டக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் 50 தொடக்கம் 100 மேற்பட்ட குடும்பங்கள் தற்போது இல்லை, அவர்களை அடையாளப்படுத்த முடியாது உள்ளது என எழுத்து மூலம் சமுர்த்தி வங்கிகளில் இருந்து பெற்றுச் சென்ற பணத்தினை மீள ஒப்படைத்து மோசடிகளிலிருந்து தப்பிக்க முற்படுவதும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம் பெற்று வருகின்றது.

ரூபா 420 க்குரிய சமுர்த்தி நிவாரண முத்திரை மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்பட்ட சுமார் 14000 மேற்பட்ட குடும்பங்களில் 90% த்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உண்மையிலயே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடுங்களாகவே உள்ளனர்.

அக்குடும்பங்களின் பெயரில் சில பிரதேச செயலகப் பிரிவுகளில் இரட்டைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒரு கொடுப்பனவுக்கான பணம் பிரிவுகளில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மோசடியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை மக்களின் முறைப்பாடுகள் ஊடாக அறிந்து கொண்ட சில பிரதேச செயலாளர்கள் உரிய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வரும் செயற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நேரடி கண்காணிப்பு விசாரணைகளை ஆரம்பித்து மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here