கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கிகை விசாரணை நடத்த, மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபராக தன்னை பெயரிட்டு இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு தடைவிதிக்குமாரு கோரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரீட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டே நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

மனுவை விசாரித்து முடியும் வரை அந்த இடைக்கால தடை அமுலில் இருக்கும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், சோபித்த ராஜகருணா ஆகியோரை உள்ளடக்கிய நீதிபதிகள் குழாமே இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

நேற்றைய தினம் இந்த விவகாரம் குறித்த மனு பரிசீலனைக்கு வந்த போது, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் ஆஜரானார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் இரண்டாவது சந்தேக நபராக தனது சேவை பெறுனரை பெயரிட்டு, அவரை மன்றில் ஆஜராக நுகேகொடை நீதிவான் விடுத்த அறிவித்தல் சட்டத்துக்கு முரணானது என அவர் வாதிட்டார்.

இதன்போது, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி, ஷீதா பாரி, நுகேகொடை நீதிவானின் நடவடிக்கைகள் சட்ட ரீதியிலானதே என வாதிட்டார்.

விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம், நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான நுகேகொடை நீதிவான் நீதி மன்றில் உள்ள வழக்கை விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் மேன்முறையீட்டு மன்ற ரீட் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நுகேகொடை நீதிவான், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபருக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here