கொரோனா தொற்றுக்குள்ளான இந்திய புடவை வியாபாரி யாழில் பல இடங்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டாராம்!

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் திரும்பிய நிலையில், கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தமிழக புடவை வியாபாரி, யாழில் பல இடங்களிற்கும் வர்த்தகத்திற்கு சென்று வந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேஸ் பாபு என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் மேலும் சிலருடன் யாழ்ப்பாணம் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டார்.

இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் கடந்த 31ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கணேஸ் பாபுவும் இந்த குழுவில் நாடு திரும்பியிருந்தார். தனது சொந்த மாவட்டமான திண்டுக்கல்லிற்கு சென்ற பின்னர், அங்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதியே அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், இந்திய தூதரகம் இது பற்றி மூச்சும் விடாமல் இருந்ததாக குற்றம்சுமத்தப்படுகிறது.

கடந்த 31ஆம் திகதி யாழிலிருந்து பேருந்தில் சென்ற கணேஸ்பாபு குழுவினர், புறக்கோட்டையில் குளித்து விட்டு, அன்றைய தினமே கொழும்பு துறைமுகம் ஊடாக இந்தியா சென்றனர்.

கணேஸ் பாபு உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் இணுவிலில் தங்கியிருந்துள்ளனர். தியேட்டர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து, கணேஸ் பாபுவும் மேலும் 3 தமிழக வியாபாரிகளும் தங்கியிருந்துள்ளனர்.

அண்மையில் குடாநாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பல இடங்களிற்கு அவர் வியாபாரத்திற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, இணுவிலில் அவர் 3 வீடுகளிற்கு அடிக்கடி சென்று வந்தார். ஏழாலையில் ஒரு வீட்டுக்கு சென்று வந்தார். இந்த 4 வீடுகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வீட்டிலுள்ளவர்களிற்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

கணேஸ் பாபு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஏழாலையிலுள்ள வீட்டினருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அந்த வீட்டினரே, வடக்கு சுகாதார சேவைகள் பணிமனைக்கு அறிவித்தனர். அந்த தகவலை உறுதிசெய்யுமாறு, யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்திடம், சுகாதார திணைக்களம் கோரியுள்ளது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி யாழில் இந்திய வியாபாரியொருவர் உயிரிழந்திருந்தார். அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதா என்ற பரபரப்பு தகவல் பரவியபோதும், அவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பினாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here