மலையக மக்கள் முன்னணியின் பதில் பிரதி செயலாளர் நியமனம்!

மலையக மக்கள் முன்னணியின் பதில் பிரதி செயலாளர் நாயகமாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நிதிச்செயலாளருமான பேராசிரியர் விஜயசந்திரன் ஏகமனதாக மத்திய குழுவிலும் அரசியல் உயர் பீடத்திலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் ஊடகங்களுக்கு நேற்று (08) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

ஏற்கனவே கட்சியின் பிரதி செயலாளராக பேராசிரியர் விஜயசந்திரன் கட்சியின் உயர் பீடத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு என்னுடன் இணைந்து சிறப்பாக செயற்பட்டு வந்தார். நான் சுகவீனமுற்றிருந்த காலப் பகுதியில் அவர் பதில் செயலாளராக நாயகமாக என்னுடைய வேலைகளையும் அவரே பார்த்து வந்தார்.

ஆனால் நாங்கள் அனுசா சந்திரசேகரனை கட்சிக்குள் உள்வாங்கிய பின்பு அவருக்கு பொறுத்தமான பொறுப்பான ஒரு பதவியை வழங்க வேண்டும் என எங்களுடைய மத்திய குழு தீர்மானித்த பொழுது பேராசிரியர் விஜயசந்திரன் தானாக முன்வந்து தன்னுடைய பிரதி செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்தார்.

அதன் பின்பே அனுசா சந்திரசேகரன் கட்சியின் பிரதி செயலாளராக நிமிக்கப்பட்டார். ஆனால் அவர் தன்னுடைய பதவியை பொறுப்பாக நிறைவேற்றவில்லை. கூட்டங்களுக்கு முறையாக சமூகமளிக்கவில்லை. நான் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே என்னுடைய பொறுப்புகளையும் நிறைவேற்றினேன். ஆனால் இன்று அவர் கட்சியின் மத்திய குழு அரசியல் உயர்பீடங்களின் தீர்மானத்திற்கு எதிராக தன்னிச்சையாக தனியாக சுயேச்சை குழுவில் தலைமை வேட்பாளராக போட்டியிடுவதன் காரணமாக பிரதி செயலாளராக அவர் செயற்படுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இது தேர்தல் காலம் என்பதால் செயலாளருடைய தேவை அதிகமாக இருக்கும் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு பதில் பிரதி செயலாளர் நாயகமாக மீண்டும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நிதிச்செயலாளருமான பேராசிரியர் விஜயசந்திரன் பிரதி பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுசா சந்திரசேகரன் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியிருப்பதாக வெளியான தகவல் தவறானது என்பதையும் இந்த நேரத்தில் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here