போலி கல்வித்தகுதியுடன் அதிகாரியின் பெயர்: விவசாய திணைக்களத்தின் வளவாளர் பட்டியலில் தில்லாலங்கடி!

வடமாகாண விவசாய திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடு ஒன்று தொடர்பாக தமிழ்பக்கத்திற்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வளவாளர் தெரிவில் முறையான அளவுகோல் பின்பற்றப்படவில்லையென்ற குற்றச்சாட்டை திணைக்களத்தின் அதிகாரிகள் பலர் சுமத்திவரும் நிலையில், திணைக்களத்தின் முக்கிய அதிகாரியொருவரின் கல்வித்தகைமை தொடர்பாக போலியான தகவல்கள் இடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான ஆதாரங்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

தென்னை அபிவிருத்திசபையின் பயிற்சிநெறியொன்றிற்காக வடக்கு விவசாய திணைக்களத்தில் இருந்து வளவாளர்கள் கோரப்பட்டிருந்தனர். இதையடுத்து, வளவாளர் பட்டியல் ஒன்றை மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தயாரித்து அனுப்பியுள்ளார். இந்த பட்டியலே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்டியல் எந்த அளவுகோலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். மாகாண விவசாய பணிப்பாளர் தனக்கு நெருக்கமானவர்களை மாத்திரம் வளவாளர் பட்டியலில் இணைத்துள்ளார், முறையான தகுதியுள்ளவர்கள் இணைக்கப்படவில்லையென குற்றம்சுமத்தியுள்ளனர்.

தரம் 1 ஐ சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள் திணைக்களத்தில் இருக்கும் நிலையில், தரம் 2, தரம் 3 ஐ சேர்ந்த போதனாசிரியர்கள் இருவர் வளவாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். வளவாளர்களாக செயற்படுவது புலமைப்பரிசில், பதவி உயர்வு விடயங்களில் ஓரளவு உதவக்கூடியது என்ற நிர்வாக நடைமுறை இருக்கும் நிலையில், வளவாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தகுதியான அதிகாரிகள் இருக்கும்போது, அவர்களை தவிர்த்து, அவர்களை விட தர நிலையில் கீழிருப்பவர்களை வளவாளர்களாக்கியது- திட்டமிட்ட அநீதி, முறையற்ற நடவடிக்கையென விசனம் தெரிவித்துள்ளனர். வடக்கு விவசாய அமைச்சில் கடந்த சில வருடங்களாகவே இப்படியான நடவடிக்கைகள் நடப்பதாகவும், இதனால் விவசாய நிர்வாக சேவையிலுள்ள சுமார் ஆறு வரையான அதிகாரிகள் மாகாண விவசாய திணைக்களத்தை விட்டு வெளியேறி, மத்திய விவசாய திணைக்களத்தில் இணைந்து கொண்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். இவர்களில் மூவர் தற்போதைய மாகாண பணிப்பாளரை விட சேவை மூப்பிலுள்ள அதிகாரிகள். இப்படியான வெளியேற்றங்களால் அண்மைய வருடங்களில் வடக்கு விவசாய திணைக்களம் போதிய வினைத்திறன் இல்லாமல் திண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தென்னை அபிவிருத்தி சபையால் கோரப்பட்ட வளவாளர்களை, வடக்கு விவசாய பணிப்பாளர் எந்த அளவுகோலின் அடிப்படையில் தெரிவுசெய்தார்? தகுதியின் அடிப்படையில் தெரிவுசெய்தாரா அல்லது தனக்கு வேண்டியவர்கள் என்ற ரீதியில் தெரிவுசெய்தாரா?

இந்த தெரிவில் வேறு சில குழப்பங்களும் உள்ளதை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். சில அதிகாரிகள் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ள துறைகளை அவர்களிற்கு ஒதுக்காமல், அதிலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்துகிறார்கள்.

இந்த தகவல்களை விட, மோசமான இன்னொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பட்டியலில் அதிகாரியொருவரின் கல்வி தரம் போலியாக இடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளராக கடமையாற்றும் பி.உகநாதன் – B.Sc in Agriculture என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவர் அந்த பட்டத்தை பெற்றவர் அல்ல. எனினும், வடக்கு விவசாய பணிப்பாளரால் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில், போலியாக கல்வித்தரம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரி உகநாதனின் தவறு எதுவும் இல்லாதபோதும், திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் பட்டியலை தவறாக தயாரித்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here