அனைத்து மனுக்களும் இரத்து செய்யப்பட்டன: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பொதுத்தேர்தலை சவாலுக்குட்படுத்தியும், தேர்தல் தினத்தை சவாலுக்குட்படுத்தியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

இந்த மனுக்களிற்கு எந்த சட்டபூர்வ அடிப்படைகளும் இல்லையென நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.

ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவது, நாடாளுமன்றத்தை கலைப்பதென ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுக்கலாமா இல்லையா என்பது குறித்து, கடந்த 10 நாட்களாக நடந்த விவாதங்களின் முடிவில் இன்று இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்கள் புவனெக அலுவிகார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட ஆகியோர் அடங்கிய குழாம் இந்த மனுக்களை கடந்த 10 நாட்களாக பரிசீலித்தது.

சட்டத்தரணி சரித குணரத்ன, முன்னாள் ரவயா ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான விக்டர் ஐவன், மற்றும் ஏழு பேர், மாற்று கொள்கைகளிற்கான மையத்தின் நிர்வாக இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜாதிகா ஹெலா உருமய தலைவரும், முன்னாள் அமைச்சருமான பட்டலி சம்பிக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம மற்றும் பலர் அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்தனர்.

மே 14 அன்று, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அவற்றை பரிசீலிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சை நியமிக்க தலைமை நீதிபதி முடிவு செய்தார்.

இந்த மனுக்களில், தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, சட்ட மாஅதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை கலைத்தமை, தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்தமை தொடர்பில் சட்ட வலுவற்றதாக கருதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், இந்த மனுக்கள் நியாயமற்றதென தெரிவித்த பிரதிவாதிகள் தரப்பினர் சகல மனுக்களையும் முற்றாக நிராகரிக்க வேண்டுமென தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here