அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிளொய்ட்டிற் அஞ்சலி செலுத்திய லிவர்பூல் வீரர்கள்!


அமெரிக்காவில் கறுப்பின மனிதரான ஜோர்ஜ் ஃபிளொய்ட்டை வெள்ளையின பொலிஸ்காரன் ஒருவன் கழுத்தில் முழங்காலால் அழுத்தி கொன்றமைக்கு எதிராக உலகளவில் உணர்வுகள் தட்டியெழுப்பப்பட்டு வருகிறது.

#BlackLivesMatter என்ற ஹாஷ்டேக் ருவிற்றரில் மட்டுமல்ல, நிறவெறிக்கெதிராக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பேரெழுச்சிக்கு உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்ட கழகமான லிவர்பூல் வீரர்கள், #BlackLivesMatter போராட்டத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியும், கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிளொய்ட்டை நினைவுகூர்ந்தும், நேற்று திங்கட்கிழமை அன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் உள்ள மைய வட்டத்தைச் சுற்றி முழங்காலில் உட்கார்ந்தனர்.

வெள்ளையின பொலிஸ்காரர் தனது முழங்காலால் அழுத்தி கொன்ற, அதே நிலையில் உட்கார்ந்து, அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் பொலிஸ்காரர்களும் இந்த நிலையில் உட்கார்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் லிவர்பூல் வெளியிட்ட புகைப்படத்தில், வீரர்கள் மைய வட்டத்தை சுற்றி, முழங்காலில் உட்கார்ந்திருக்கிறார்கள். “ஒற்றுமை வலிமை # பிளாக் லைவ்ஸ்மேட்டர்” என்ற தலைப்பில் அந்த படத்தை வெளியிட்டனர்.

இதேவேளை, கொரோனாவிற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது பெரிய தொழில்முறை கால்பந்தாட்ட தொடரான ஜெர்மனியின் பன்டெஸ்லிகாவில் நான்கு வீரர்கள் ஜோர்ஜ் ஃபிளொய்ட் விவகாரத்தில் நீதி கோரும் வாசகங்களை தமது சீருடையில் எழுதியிருந்தனர்.

பன்டெஸ்லிகா தொடரில் ஞாயிற்றுக்கிழமை, போருஸ்ஸியா டார்ட்மண்ட் வீரர்களான ஜடன் சான்சோ மற்றும் அக்ராஃப் ஹக்கிமி ஆகியோர் ஜோர்ஜ் ஃபிளொய்ட் வவிகாரத்தில் நீதி வழங்கப்பட வேண்டுமென்ற வாசகங்களை சட்டையில் எழுதியிருந்தனர்.

அவர்களது சீருடையில் “Justice for George Floyd” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இங்கிலாந்தை சேர்ந்த சஞ்சோவும், ஸ்பெயினை சேர்ந்த ஹக்கிமியும் கோல் அடித்த பின்னர் தங்கள் அணி சட்டைகளை கழற்றி, நீதி கோரும் வசனங்களை காண்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here