புர்கினா பாசோவில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி!


புர்கினா பாசோ நாட்டின் கால்நடை சந்தையொன்றுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்று , புர்கினா பாசோ ஆகும்.

இந்த நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இன குழுக்கள் இடையேயும் அவ்வப்போது அங்கு மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அங்கு கொம்பீங்கா என்ற இடத்தில் கால்நடை சந்தை ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம் அங்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற துப்பாக்கிதாரிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் நடந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தற்போது அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பயங்கரவாதிகள்தான் என அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதரவு பெற்ற புர்கினோ பாசாவின் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள்மீது அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மத அடிப்படையிலான பயங்கரவாதிகளுக்கு எதிராக அவ்வப்போது அரசாங்கம் வெற்றி பெற்றதாக கூறினாலும், புர்கினோ பாசோவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு இல்லாத நிலைதான் தொடருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் பெரும்பாலும் பாடசாலைகளை குறி வைத்து தாக்குதல்கள் நடத்துவதாகவும், இதனால் 3 இலட்சம் குழந்தைகள் பாடசாலைகளில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here