சிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துவதை கட்டுப்படுத்துங்கள்: ஜனாதிபதி உத்தரவு!


பாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் இடம்பெறும் பல்வேறு குற்றங்கள் மற்றும் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்கள் சிறைச்சாலைகளில் இருந்து வழிநடத்தப்படுவதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது தொடர்பாக மக்கள் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்து வரும் கருத்து மிகவும் கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

‘இது சரிசெய்யப்பட வேண்டும். சிறைச்சாலைகளினுள் கையடக்க தொலைபேசி பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டும்’ என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் பற்றி ஆராய்வதற்காக நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் அல்லது பொலிஸ் வீழ்ச்சியடையுமானால் நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அது தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எத்தகைய அரசியல் கருத்தை கொண்டிருந்த போதும் அதிகாரிகள் சரியானதையே செய்வார்கள் என்றால் அதனை அனுமதிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் தற்போது நிலவும் குறைபாடுகளை நீக்கி முழுமையாக முறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளர், இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஒரு குழுவின் தலைமையில் அது மேற்கொள்ளப்படும். அதிகாரிகளை பயிற்றுவித்தல், வலுவூட்டுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பு குழுவொன்றிடம் ஒப்படைப்பதற்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

ஊழல் மற்றும் வினைத்திறனற்ற அதிகாரிகளை இனம்கண்டு அவர்கள் தொடர்பில் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, நீதியமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முஹம்மத், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உயரதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here