அம்மாவுடன் பேசுவதை போல, மக்களிடம் பேசச் சொன்னார் அப்பா: ஜீவன் தொண்டமான்!


‘மலையகம் தொடர்பில் எனது தந்தை வைத்திருந்த கனவுகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என, அவரின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை நிகழ்வில் மக்களுக்கு நன்றி உரை ஆற்றுகையில் அவர் இதனை கூறினார்.

அவர் தெடர்ந்து கூறுகையில், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அப்பாவுக்கு தகுதியான இறுதி அஞ்சலியை செலுத்த முடியவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின்னர், மாபெரும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்படும்.

பல்கலைக்கழகம், வீட்டுத்திட்டம் உள்ளிட மலையகம் தொடர்பில் பல்வேறு கனவுகளுடன் தந்தை இருந்தார். கிராமங்களை உருவாக்க நினைத்தார். ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை தொடர்பில் இறுதிவரை பேசினார்.

பிரதமரை சந்தித்து விட்டு சந்தோசமாகத்தான் வீட்டுக்கு வந்தோம். சந்தோசமாக வீட்டிலிருந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். திடீரென ஜீவன் என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்க்க, அவர் சரிந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார். அவரை கைத்தாங்கலாக பிடித்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார்.

எனக்கு அனுபவம் காணாது என்கிறார்கள். இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டபோதும், இப்படி சொன்னார்கள். அப்போது அப்பாவிடம் கேட்டேன், எனக்கு செந்தமிழ் பேச தெரியாதென. அவர் சொன்னார், உன் அக்காவுடன், அம்மாவுடன், என்னுடன் எப்படி பேசுகிறாயோ, அப்படி பேசு என. நீ உண்மையாக, இயல்பாக பேசினால் மக்கள் உன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.

அண்மையில் கூட அப்பாவிடம் அனுபவ விசயத்தை பேசினேன். முதுகில் குத்துவதற்கு தான் அனுபவம் தேவை, மக்களுக்கு சேவை செய்ய இல்லை என்று என்னிடம் கூறினார். அவர் இவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.

இத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிந்துவிடும் என்று நினைப்பவர்களுக்கும், அச்சத்தில் உள்ள மக்களுக்கும் ஒன்று கூறுகின்றேன்.

இருட்டை பார்த்து பயப்பட வேண்டாம். காலையில் சூரியன் உதிக்கும், சேவல் நிச்சயம் கூவும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here