‘மச்சானுக்கும் மச்சானுக்குமிடையிலான பிரச்சனைக்குள் சிக்க வேண்டாம்’: மாவை, சுமந்திரனுக்கு கறார் ஆலோசனை வழங்கிய சம்பந்தன்!

கோப்புபடம்

“மச்சானுக்கும் மச்சானுக்குமிடையிலான பிரச்சனைக்குள் தேவையில்லாமல் கட்சி பிரமுகர்கள் சிக்கி, தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம்“ என இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் (29) கொழும்பில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கிடையிலான சந்திப்பில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. இதில் இரா.சம்பந்தன், தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோருடன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதனிற்கு திடீரென ஏற்பட்ட வயிற்று உபாதை காரணமாக சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சந்திப்பில் இரா.சம்பந்தனினால் ஆலோசனை வழங்கப்பட்ட தரப்புக்களிடம் தமிழ் பக்கம் வினவியபோது, அவர்கள் அந்த சம்பவத்தை உறுதிசெய்தனர்.

இந்த சந்திப்பு, சுமந்திரன் விவகாரத்தை மட்டும்- பிரதானமானதாக அலசாமல்- கூட்டமைப்பின் பல்வேறு விடயங்களை ஆராயும் சந்திப்பு என தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்- இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அணி மோதல்களை சுட்டிக்காட்டிய த.சித்தார்த்தன், இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதன்போது, மாவை சேனாதிராசா- யாழில் வெளியாகும் இணையப்பத்திரிகையான காலைக்கதிரில் தன்னைப்பற்றி இல்லாத பொல்லாத விடயங்கள் எல்லாம் எழுதப்படுகின்றன. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்படுகிறது என முறையிட்டார்.

இந்த விவகாரத்தை இரா.சம்பந்தன் முன்னரே அறிந்திருந்தாலோ என்னவோ, எம்.ஏ.சுமந்திரன் பக்கமாகவும் திரும்பி பார்த்து விட்டு- மாவை, சுமந்திரன் இருவரையும் பார்த்தபடி- “அது மச்சானுக்கும் மச்சானுக்குமிடையிலான (ஈ.சரவணபவன்- ந.வித்தியாதரன்) பிரச்சனை. இதில் நீங்கள் தலையிட்டு கட்சிப்பிரச்சனையாக்க வேண்டாம். இதனால்தான் தேவையற்ற பிரச்சனைகள்“ என கண்டிப்பான தொனியில் கூறினார்.

ஈ.சரவணபவனை, மாவை ஆதரிக்கிறார் என சுமந்திரன் தரப்பு கருதுகிறது. காலைக்கதிரில் தம்மைப்பற்றிய விடயங்களை எழுத சுமந்திரன் தரப்பு பின்னணியில் இருக்கிறார்கள் என மாவை தரப்பு கருதுகிறது. அதற்கு ஆதாரமாக, சாவகச்சேரியை சேர்ந்த சுமந்திரனின் வலதுகை ஒருவர் ஒன்றுவிட்ட ஒருநாளாவது அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று முகாமிட்டு வரும் தகவலை மாவை தரப்பு இரா.சம்பந்தனின் காதில் போட்டதாகவும் தகவல்.

மாவை, சுமந்திரன் இருவருக்கும் இரா.சம்பந்தன் சீரியசாக ஆலோசனை வழங்கிவிட்டு, நகைச்சுவையாக- “அவருக்கு நீர் சீற்றை வெட்டிய கோபம் போல“ என மாவையை பார்த்து சொன்னார்.

“இல்லை.. நான் அவரது சீற்றை வெட்டவில்லையே. நீங்கள்தானே வெட்டினீர்கள். அதைவிட, அப்போது (2010) அவரே (வித்தியாதரன்) என்னிடம் வந்து மச்சானிற்கு (சரவணபவன்) ஆசனத்தை வழங்குங்கள் என கேட்டார்“ என குறிப்பிட்டார்.

இதற்கு சம்பந்தன் எதுவும் பதிலளிக்காமல் சத்தமில்லாமல் இருந்து விட்டார்.

இதன்போது சித்தார்த்தன்- “இந்தப் பிரச்சனையை நீங்கள் 2010இலேயே தீர்த்திருக்க வேண்டும். அவருக்கு ஆசனத்தை வழங்காமல் விட்டிருக்கலாம்“ என்றார்.

ஈ.சரவணபவனிற்கு ஆசனம் வழங்கிய விவகாரத்தில் ந.வித்தியாதரன் தொடர்ந்து தனது பத்திரிகையில் அதிருப்தி தெரிவித்து வருகிறார். மாவை சேனாதிராசாதான் அவருக்கு ஆசனம் வழங்கினார் என குறிப்பிடுவதன் மூலம், தனக்கான ஆசனத்தை அவர் வெட்டினார் என என அவர் குறிப்பிட்டு வரும் நிலையில், புதிய தகவலை மாவை சேனாதிராசா தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாவை தரப்பிடம் தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, மேலுமொரு புதுத்தகவலையும் தந்தார்கள்.

“தனது அரசியல் பிரவேசத்தை மாவை சேனாதிராசாதான் குழப்பினார் என வித்தியாதரன் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். ஆனால் அது தவறு. வித்தியாதரனிற்கு ஆசனத்தை வழங்குவதில்லையென 2010 இல் இரா.சம்பந்தன்தான் முடிவெடுத்தார். வித்தியாதரனிடம் தன்பற்றிய மனக்குறை இருப்பதை அறிந்த பின்னர், அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென மாவை விரும்பினார். இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட வித்தியாதரன் விரும்பினார். அதற்கான விருப்பத்தை அவர் தெரிவித்திருந்தார். வடக்கு அவைத்தலைவர் வந்து அதை மாவையிடம் தெரிவித்தார்கள். தமிழ் அரசு கட்சியின் மகளிர் அணி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்டு, சீ.வீ.கே.சிவஞானத்தையும் அழைத்துக் கொண்டு மாவை சேனாதிராசா திருகோணமலைக்கு போனார். யாழிருந்து திருகோணமலைக்கு போய், இரா.சம்பந்தனை சந்தித்து, வித்தியாதரன் திருகோணமலையில் போட்டியிட விரும்பும் விடயத்தை கூறி, அவருக்கு வாய்ப்பளிக்கலாமென மாவை சேனாதிராசா கேட்டார். ஆனால் சம்பந்தன் அதை ஏற்கவில்லை. மாவை அதை கேட்டபோது, கட்சியின் செயலாளர் கி.துரைரராசசிங்கமும், எம்.ஏ.சுமந்திரனும் பக்கத்தில் இருந்தார்கள். வித்தியாதரனிற்கு ஆசனம் வழங்கலாமென அவர்கள் ஒரு தலையசைப்பு கூட செய்யவில்லை.“ என பொரிந்து தள்ளினார்கள்.

நேற்று முன்தினம் சந்திப்பு குறித்து, எம்.ஏ.சுமந்திரன் தரப்பிடம் கேட்டபோது, இரா.சம்பந்தன் ஆலோசனை வழங்கியதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தாம் எந்த தரப்புடனும் சேர்ந்து செயற்படவில்லையென்றும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here